2015-08-19 16:29:00

இஸ்லாமிய காலநிலை மாற்றம் கருத்தரங்கின் தீர்மானம்


ஆக.19,2015. பூமிக்கடியில் புதைந்திருக்கும் படிம எரிபொருளின் பயனைக் குறைத்துக் கொண்டு, மறுசுழற்சி வழியே புதுப்பிக்கப்படக் கூடிய சக்தியை அதிகம் பயன்படுத்தும் முயற்சியில் இஸ்லாமிய நாடுகள் இணையவேண்டும் என்று இஸ்லாமிய காலநிலை மாற்றம் கருத்தரங்கு தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரு நாட்கள், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய காலநிலை மாற்றம் கருத்தரங்கின் இறுதியில், அங்கு கூடியிருந்த 20 நாடுகளின் பிரதிநிதிகள் இத்தீர்மானத்தை வெளியிட்டனர்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம், பாரிஸ் நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில், படிம எரிபொருளின் பயனைக் குறைக்கும் முயற்சிகளுக்கு, இஸ்லாமிய நாடுகள் முழு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

எண்ணெய் வளம் அதிகம் உள்ள இஸ்லாமிய நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, 2050ம் ஆண்டுக்குள் பூமிக் கோளத்தை வாழக்கூடிய ஒரு கோளமாக அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்லவேண்டும் என்ற கருத்தும் இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

சுற்றுச்சூழல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட திருமடலின் கருத்துக்களை எதிரொலிக்கும் இந்த கருத்தரங்கின் முயற்சிகள், திருப்பீடத்தின் ஆதரவைப் பெற்றிருப்பதாக, திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது, குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.