2015-08-19 16:23:00

இந்தோனேசியா 70வது சுதந்திர தினம் ஆயர்களின் அறிக்கை


ஆக.19,2015. இந்தோனேசியா நாட்டில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அரசியல்வாதிகள் நடுவில், நன்னெறி விழுமியங்கள் குறைந்து காணப்படுகின்றன என்றும் அந்நாட்டு ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 17, இத்திங்களன்று இந்தோனேசியாவின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நாட்டின் பல துறைகளில், பாகுபாடற்ற நிலை குறைந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் சட்ட திட்டங்கள், பஞ்சசீலம் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும், அக்கொள்கையை நடைமுறைப்படுத்த, அரசியல் வாதிகளின் முழு ஈடுபாடும் ஒத்துழைப்பும் தேவை என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

1945ம் ஆண்டு, ஜப்பானின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தோனேசியா, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நெதர்லாந்தின் காலனி என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, நான்கு ஆண்டுகள் போராடி வந்ததென்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.