2015-08-19 15:24:00

அமைதி ஆர்வலர்கள் : 1993ல் நொபெல் அமைதி விருது பாகம் 2


ஆக.19,2015. தென்னாப்ரிக்க கறுப்பு இனத் தலைவர் அமரர் நெல்சன் மண்டேலா, அந்நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் ப்ரெட்ரிக் தெ கிளெர்க் ஆகிய இருவருக்கும் 1993ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. தென்னாப்ரிக்காவில் நிறவெறி கோட்பாடு அமைதியான வழியில் முடிவடைந்தது, அந்நாட்டில் புதிய மக்களாட்சி மலர அடித்தளம் போடப்பட்டது, இவையிரண்டிலும் இவர்கள் இருவரின் பங்கிற்காக இவ்விருது அளிக்கப்பட்டது என அச்சமயத்தில் நொபெல் விருதுக் குழு கூறியது. நெல்சன் மண்டேலா அவர்கள் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளிவரக் காரணமாக இருந்த அப்போதைய தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ப்ரெட்ரிக் தெ கிளெர்க் அவர்கள் பற்றி இன்று பார்ப்போம்.

ப்ரெட்ரிக் தெ கிளெர்க் அவர்கள், 1936ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி தென்னாப்ரிக்காவின் ஜொஹானஸ்பெர்க்கில் பிறந்தார். இவரின் மூதாதையர் அக்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து தென்னாப்ரிக்காவில் குடியேறியவர்கள். சட்டக் கல்வி பயின்ற தெ கிளெர்க் அவர்கள், வழக்கறிஞராகவும் பயிற்சி செய்தார். இவர், தென்னாப்ரிக்க பாரம்பரிய வெள்ளையின அரசியல் சூழலில் வேரூன்றிய குடும்பத்தில் வளர்ந்தார். தென்னாப்ரிக்காவில், நிறவெறிக் கோட்பாட்டின் அடிப்படையில், 1948ம் ஆண்டில் அந்நாட்டு தேசிய கட்சி, வெள்ளையினத்தவர் மட்டுமே பங்குகொண்ட தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது, தெ கிளெர்க் அவர்களின் தந்தை ஜொஹான்னஸ், அக்கட்சியின் டிரான்ஸ்வால் மாநிலத்தின் செயலராக மாறினார். பின்னர் அரசில் காபினெட் அமைச்சர், செனட் அவைத் தலைவர், 1975ம் ஆண்டில் இடைக்கால அரசுத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். தெ கிளெர்க் அவர்களின் சகோதரர் வில்லெம், சனநாயக கட்சியைத் தொடங்கியவர்களுள் ஒருவர். எனவே இத்தகைய அரசியல் குடும்பத்தில் வளர்ந்த ப்ரெட்ரிக் தெ கிளெர்க் அவர்களும், 1969ம் ஆண்டில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1978ம் ஆண்டில் தபால், சமூகத் தொடர்பு, சமூகநலம், ஓய்வூதியம் ஆகியவை கொண்ட துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர், உள்துறை அமைச்சர், தேசிய கல்வித் துறை அமைச்சர் மற்றும் திட்டத் துறை அமைச்சர் என, சில முக்கிய துறைகளில் பணியாற்றினார். பின்னர் 1986ம் ஆண்டில் மக்களவைத் தலைவரானார் ப்ரெட்ரிக் தெ கிளெர்க்.

ப்ரெட்ரிக் தெ கிளெர்க் அவர்கள், தேசிய கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியபோது  பல்கலைக்கழகங்களில் பாகுபாடுகளை ஆதரித்தார். இவர் அரசுத்துறைகளில் பணியாற்றிய காலங்களில் நிறவெறி பாகுபாட்டுக் கோட்பாட்டை ஆதரிப்பவராகவே செயல்பட்டார். டிரான்ஸ்வாலில் தேசிய கட்சியின் செயலராக இருந்தபோது, சீர்திருத்தத்தை ஆதரித்துப் பேசத் தெரியாதவராகவே இருந்தார். ஆனால், 1989ம் ஆண்டு பிப்ரவரியில் தென்னாப்ரிக்க வெள்ளையின தேசிய கட்சியின் தலைவராகவும், அதே ஆண்டு செப்டம்பரில் தென்னாப்ரிக்க அரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இவர் நிறவெறிக் கோட்பாட்டுக்கு எதிராக பேசத் தொடங்கியதும் ஆளும் கட்சி வியப்படைந்தது. இவர் தேசிய கட்சித் தலைவராக இருந்தபோதும், இனப்பாகுபாடற்ற தென்னாப்ரிக்க அரசுக்கும், நாட்டின் வருங்காலம் குறித்த பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தார். இது நடந்து சில மாதங்கள் சென்று, அதாவது 1990ம் ஆண்டு பிப்ரவரியில், நெல்சன் மண்டேலாவின் ANC என்ற ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் தென்னாப்ரிக்க கம்யூனிச கட்சி மீதான தடைகளைத் திடீரென நீக்கினார். இவ்விரு கட்சிகளின் உறுப்பினர்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நெல்சன் மண்டேலா உட்பட இக்கட்சிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்தார். சட்டமுறைப்படி சொல்ல வேண்டுமானால், நிறவெறி பாகுபாட்டுக் கோட்பாடு படிப்படியாக முடிவுக்கு வருவதற்கு தெ கிளெர்க் அவர்கள் வழி அமைத்தார். நாட்டில் புதிய அரசியல் அமைப்பு விவகாரத்தில், நிறவெறியை எதிர்ப்பவர்களோடு அரசு பேச்சவார்த்தைகளை நடத்த வழி அமைத்துக் கொடுத்தார். இதற்காக இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆயினும், இவரது தலைமையில் இயங்கிய தென்னாப்ரிக்க அரசும், நெல்சன் மண்டேலாவின் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியும் பேச்சவார்த்தைகளை நடத்தியதன் பயனாக, அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்தது. நிறவெறி பாகுபாட்டுக் கோட்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து, வெள்ளையினத்தவர் மட்டுமே பங்குகொண்ட கருத்து வாக்கெடுப்பை 1992ம் ஆண்டில் நடத்தினார். இதில் பெருமளவு வெற்றியும் கிடைத்ததால், நிறவெறி கோட்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தினார் ப்ரெட்ரிக் தெ கிளெர்க்.

ப்ரெட்ரிக் தெ கிளெர்க் அவர்கள், 1990ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவில் அணு ஆயுதத் திட்டங்கள் நிறுத்தப்படுவதற்கு ஆணையிட்டார். அந்நாட்டில் அணுஆயுதக் களைவுத் திட்டம் 1991ம் ஆண்டில் முழுமையாய் நிறுத்தப்பட்டது. 1993ம் ஆண்டில் ப்ரெட்ரிக் தெ கிளெர்க் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களுடன் சேர்ந்து நொபெல் அமைதி விருதையும் பெற்றார். 1996ம் ஆண்டில் தேசியக் கட்சித் தலைமையிலிருந்து விலகினார். அரசியலிலிருந்தும் ஓய்வுபெற்றார். இன்னும், 1991ம் ஆண்டில் Félix Houphouët-Boigny அமைதி விருது, 1992ம் ஆண்டில் Asturias இளவரசர் விருது, மேலும் சில விருதுகளையும் பெற்றுள்ளார் ப்ரெட்ரிக் தெ கிளெர்க். 1989ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு மே மாதம் வரை தென்னாப்ரிக்க அரசுத்தலைவராகப் பணியாற்றிய இவர் ஆப்ரிக்காவின் கடைசி வெள்ளையின அரசுத்தலைவரும் ஆவார். நெல்சன் மண்டேலா அவர்களின் அரசில், உதவி அரசுத்தலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றியிருக்கிறார் ப்ரெட்ரிக் தெ கிளெர்க். வறுமையும், இகழ்ச்சியும் ஆட்சி செய்யும் இடத்தில் அமைதி ஆட்சி செய்ய முடியாது.

அறியாமையும், கல்வியறிவின்மையும், தகவலறியா நிலையும் இருக்குமிடத்தில் அமைதி மலராது என்று சொன்னவர் தென்னாப்ரிக்க முன்னாள் அரசுத்தலைவரும், 1993ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டவருமான ப்ரெட்ரிக் தெ கிளெர்க். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.