2015-08-18 14:57:00

படைப்பைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஒன்றிணைய அழைப்பு


ஆக.18,2015. படைப்பைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஆசியத் திருஅவைகள் முன்னிலை வகிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் காலநிலை மாற்றம் குறித்த ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் இரண்டு நாள் கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியை இச்செவ்வாயன்று நிறைவேற்றிய கர்தினால் சார்லஸ் போ அவர்கள், தீமையானது கொண்டாட்டத்துடன் நடைபோட்டு, மனிதக் குடும்பங்களையும், இறைவனின் கொடையாகிய இயற்கையையும் அழித்து வருகின்றது என்று கூறினார்.

ஆசிய கத்தோலிக்கத் தலைவர்கள், காலநிலை மாற்றத்திற்கு நடைமுறைத் தீர்வுகளைப் பரிந்துரைக்குமாறு கேட்டுள்ள கர்தினால் சார்லஸ் போ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ அண்மைத் திருமடல் பற்றிக் குறிப்பிட்டு,    படைப்பைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று கூறினார்.

அண்மை ஆண்டுகளாக இடம்பெறும் இயற்கைப் பேரிடர்கள் பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் சார்லஸ் போ அவர்கள், உலகம் வெப்பமடைதல் என்ற வார்த்தைகளைக்கூட அறியாத நம் ஏழைகள், அதனால் கடந்த பத்து ஆண்டுகளில் கடுமையாய்ப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.