2015-08-18 14:41:00

நோயாளர்களைப் பராமரிப்பதற்கு இரக்கத்தின் ஆண்டு ஏற்ற காலம்


ஆக.18,2015. “வானகத்தந்தையின் கருணைநிறை அன்பை நாம் அனுபவிக்கும்போது, அந்த மகிழ்வை இன்னும் மேலாக நம் அடுத்திருப்பவரோடு நம்மால் பகிர்ந்துகொள்ள இயலும்”என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நோயாளர்கள் மற்றும் இறந்துகொண்டிருப்பவரைப் பாசத்துடனும், கனிவுடனும்  பராமரிக்கும் பணியில் மேய்ப்பர்களுக்கும், பொதுநிலையினருக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆர்ஜென்டினா நாட்டின் அருள்பணியாளர் அவசரப் பணிகள் கூட்டமைப்பின் தலைவர் Manuel Martin Sjöberg அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கூட்டமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் கிறிஸ்தவ இரக்கச் செயல்கள் பற்றிப் பாராட்டியுள்ள திருத்தந்தை, சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு நாம் பணிசெய்யும் போதெல்லாம் கிறிஸ்துவுக்கே பணி செய்கிறோம் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

இரக்கத்தின் ஜூபிலி ஆண்டை அறிவித்த Misericordiae Vultus என்ற பாப்பிறை ஆணையிலிருந்தும் இச்செய்தியில் மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை, துன்புறும் மக்களுக்கு அருகாமையில் நாம் இருக்கும்போது அவர்கள் நம் நட்பையும், உடன்பிறப்பு உணர்வையும் உணர்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அருளடையாளங்களைப் பெறும் தேவையில் இருப்பவர்க்கு, குறிப்பாக, அருள்பணியாளர்களைக் கண்டுபிடிக்க இயலாத நேரங்களில் தேவையில் இருப்பவர்க்கு உதவுவதற்கென ஆர்ஜென்டினா நாட்டின் கோர்தோபா நகரில் 1952ம் ஆண்டில் இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.