2015-08-18 15:19:00

நலப்பணியாளர்களைக் கவுரவிக்கும் ஐ.நா.வின் புதிய வலைத்தளம்


ஆக.18,2015. உலகின் மிகவும் பதட்டமான இடங்களில் உயிரைப் பணயம் வைத்து தியாகத்துடன் பணிசெய்த ஆயிரக்கணக்கான பன்னாட்டு நலப்பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, WHO உலக நலவாழ்வு நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 19, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படும் ஐ.நா.வின் உலக மனிதாபிமான நாளன்று ஆரம்பிக்கப்படும் ThanksHealthHero’ என்ற இணையதளம், கடும் அச்சுறுத்தலுல்களுக்கு மத்தியில், நெருக்கடி நிறைந்த சூழல்களில் நலவாழ்வுப் பணியாற்றி தங்கள் உயிரை இழந்த நலப்பணியாளர்களைக் கவரவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்று WHO இயக்குனர் Margaret Chan அவர்கள் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கும் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டையும் கண்முன்கொண்டு இப்புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், உலகிலுள்ள மக்கள் இந்த இணையதளத்திற்கு செய்திகளை அனுப்பலாம் என்றும் Chan அவர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

2014ம் ஆண்டில் 32 நாடுகளில் ஐ.நா. நலப்பணியாளர்கள் மீது 372 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 603 பேர் இறந்தனர் மற்றும் 958 பேர் காயமடைந்தனர். இதே மாதிரியான தாக்குதல்கள் இவ்வாண்டிலும் இடம்பெற்றுள்ளன என்று WHO நிறுவனம் கூறியுள்ளது. ஏமனில் மட்டும் இவ்வாண்டில் 190 நலவாழ்வு மையங்கள் செயல்பட முடியாமல் தாக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.