2015-08-17 16:34:00

திருப்பயணம் மேற்கொள்வதன்மூலம் கிறிஸ்தவர்களுக்கு உதவ முடியும்


ஆக.17,2015. புனித பூமியின் திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்வதன்மூலம்  வெளிநாட்டுக் கிறிஸ்தவர்கள், எருசலேம் வாழ் கிறிஸ்தவர்களுக்கு உதவ முடியும் என்றார் அப்பகுதியின் ஆயர் Giacinto-Boulos Marcuzzo.

அச்சத்தினால் கிறிஸ்தவர்கள் புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்வதில்லை எனக் கூறுவது ஆதாரமற்றது, ஏனெனில், சிரியா, ஈராக், லிபியா போன்ற நாடுகளுடன், புனித பூமியை இணைத்து மக்கள் குழப்பமடைகிறார்கள் என்றுரைத்த ஆயர் Marcuzzo அவர்கள், புனித பூமியில் முழு பாதுகாப்பும், அமைதியும் நிலவுகிறது என்றார்.

புனித பூமியில் வாழும் கிரிஸ்தவர்களுள் முப்பது விழுக்காட்டினர், திருப்பயணிகளால் வரும் வருமானத்தை நம்பி உள்ளனர் என்பது மட்டுமல்ல, திருப்பயணிகளின் வருகை அவர்களின் ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும் உள்ளது என்றார்.

திருப்பயணிகள் வரவில்லையெனில், அங்கு 30 விழுக்காடு மக்கள் வேலையிழப்பதுடன், அவர்கள் வேறு நாடுகளைத் தேடி வெளியேறுவதற்கும் காரணமாகிவிடும், ஆகவே புனித பூமி கிறிஸ்தவர்களுக்கு உதவ நினைக்கும் வெளிநாட்டுக் கிறிஸ்தவர்கள் திருப்பயணம் மேற்கொள்வது சிறப்பு என்றார் ஆயர் Marcuzzo.

இதற்கிடையே, வரலாற்றில் முதன்முறையாக, ஐரோப்பிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டம், புனித பூமியில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக புனித பூமியில் இடம்பெற உள்ள இந்தக் கூட்டம், செப்டம்பர் மாதம் 11முதல் 16 வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.