2015-08-17 15:26:00

கடுகு சிறுத்தாலும் – பாதிக்கப்படுவர் நிலை உணர்ந்தால்....


இரண்டாம் உலகப் போரில் பல நகரங்களின் மீது குண்டுமழை பொழிந்ததற்காக பல பாராட்டுகள், பல பதக்கங்கள் பெற்ற போர் விமானி அவர். இங்கிலாந்தில் மனநல மருத்துவர் ஒருவர், அந்தப் போர் விமானியை வைத்து ஒரு பரிசோதனை நடத்த விரும்பினார். அதனால் அவரைப் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த விமானியின் கண்களைக் கட்டி ஒரு நாற்காலியில் அமர வைத்து பரிசோதனையை ஆரம்பித்தார் மருத்துவர். உன்னுடைய போர்த்திறமைகளையெல்லாம் பாராட்டுகிறேன் என்றார் மருத்துவர். ஏற்றுக் கொள்கிறேன் என்றார் போர் விமானி. பின்னர் அவரிடம் ஒரு குழந்தைப் பொம்மையைக் கொடுத்தார். அதைச் சிறிதுநேரம் தடவிப்பார்த்துக்கொண்டே இருந்தார் விமானி. பின்னர் இது ரொம்ப நல்ல, அழகான பொம்மை என்றார். பின்னர் அந்த மருத்துவர் பெட்ரோலை அவரிடம் கொடுத்து, இதை ஊற்றி இந்தப் பொம்மையை எரித்துவிடு என்றார். இவ்வளவுதானே என்று அலட்சியமாகப் பெட்ரோலை வாங்கினார் விமானி. ஆனால் பெட்ரோலை ஊற்றத் தொடங்கியபோது போர் விமானியின் கை நடுங்கத் தொடங்கியது. என்னால் முடியவில்லை என்று பெட்ரோலை திருப்பிக் கொடுத்த விமானி அழ ஆரம்பித்தார். குண்டு மழை பொழிந்தவருக்கு குழந்தைப் பொம்மையை எரிக்க மனம் வரவில்லை. ஏனென்றால் இந்தக் குழந்தைப் பொம்மையோடு அவர் சிறிது நேரம் விளையாடிவிட்டார்.

முகம் பார்க்காத மனிதரைக் கொல்ல முடிகிறது, ஆனால் முகம் தெரிந்தப் பொம்மையைக் கொல்ல கை நடுங்குகிறது. பாதிக்கப்படும் மனிதர்களோடு பழக்கம் இருந்திருந்தால் பயங்கரவாதிகள் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார்களா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.