2015-08-15 15:42:00

புருண்டி நெருக்கடியில் திருஅவை மக்கள் பக்கம் நிற்கிறது


ஆக.15,2015. புருண்டியில் மூன்றாவது முறையாக அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட முயற்சிக்கும் அந்நாட்டு அரசுத்தலைவர் Pierre Nkurunziza அவர்களின் நெருங்கிய நண்பர் இராணுவ அதிபர் Adolph Nshimirimana அவர்கள் இம்மாதத்தில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கவலை தெரிவித்தார் தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

ஏற்கனவே நெருக்கடி நிலைகளைச் சந்தித்துவரும் புருண்டி நாட்டில், இக்கொலை சந்தேகத்திற்கு இடமின்றி கடும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறிய அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் அருள்பணி Lambert Niciteretse அவர்கள், மூன்றாவது முறையாக அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட முயற்சிப்பது, அருஷா அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்ரிக்க நாடாகிய புருண்டியில் ஹூட்டு மற்றும் டுட்டு இனங்களுக்கு இடையே இரண்டாயிரமாம் ஆண்டில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின்படி அரசுத்தலைவரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இது இருதடவைகள் மட்டுமே. மூன்றாம் முறையாகப் போட்டியிடுவது இந்த அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

மேலும், புருண்டியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கொலைகள், கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவைப் பேச்சாளர் Ravina Shamdasani அவர்கள், அந்நாட்டில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : ACD/UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.