2015-08-15 15:47:00

பங்களாதேஷில் தொழிலாளர் உரிமைகளுக்கு மேலும் உறுதி தேவை


ஆக.15,2015. வளர்ந்துவரும் நாடுகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கும் சிறப்பு வர்த்தகச் சலுகைப் பட்டியலிலிருந்து பங்களாதேஷ் நாடு அகற்றப்பட்டுள்ளவேளை, பங்களாதேஷ் நாடு, தொழிலாளர் உரிமைகளுக்கு உறுதியளித்தால், பொதுவான வர்த்தகச் சலுகைத் திட்டங்களை அந்நாடு மீண்டும் பெற முடியும் என்று பங்களாதேஷ் காரித்தாஸ் கூறியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடு, 122 வளர்ந்துவரும் நாடுகளுக்கு வழங்கும் சிறப்பு வர்த்தகச் சலுகைப் பட்டியலில் பங்களாதேஷ் நாட்டை இணைக்கவில்லை என்று இம்மாதம் 11ம் தேதி அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தப் பொதுவான சலுகைத் திட்டத்தால், அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சந்தையில் ஐந்தாயிரம் உற்பத்திப் பொருள்கள் வரைக்கும் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது.

இப்பட்டியலிலிருந்து பங்களாதேஷ் நீக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த, பங்களாதேஷ் காரித்தாஸ் இயக்குனர் Ronjon F. Rozario அவர்கள், பங்களாதேஷ் நாடு தொழில் உரிமைகளுக்கு உறுதியளித்தால், தொழிற்சாலைகள் மேலும் முன்னேற முடியும் மற்றும் தொழிலாளரும் அதிகமாகப் பலன் அடைவார்கள் என்று கூறியுள்ளார்.

பங்களாதேஷில் 2013ம் ஆண்டு ஜூனில் ரானா தொழில் வளாகம் இடிந்ததில் 1,134 தொழிலாளர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் துணி தொழிற்சாலை, 2,500 கோடி டாலர் வருமானத்தை அந்நாட்டுக்கு ஈட்டித் தருகின்றது. இந்த விபத்திற்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடு பங்களாதேஷிக்கு சலுகை வழங்குவதில் தயக்கம் காட்டி வருகிறது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.