2015-08-15 13:56:00

சுற்றுச்சூழல் நீதி-சமுதாய நீதி, இரட்டைப்பிறவிகள்


இந்தியாவில், சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை, இந்தியத் திருஅவை, ‘நீதி ஞாயிறு’ என கடைபிடித்து வருகிறது. ஆகஸ்ட் 16, இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் நீதி ஞாயிறுக்கென, இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை தெரிவு செய்துள்ள மையக் கருத்து - "Ecological Justice" - "சுற்றுச்சூழல் நீதி".

மனிதர்கள் நடுவே நிகழும் அக்கிரமங்களை நீக்கும் முயற்சிகளையே நாம் 'நீதி' என்று பல ஆண்டுகளாக அழைத்து வந்துள்ளோம். அண்மைய ஆண்டுகளில் 'நீதி' என்று பேசும்போது, அதில், மனித சமுதாயம் மட்டுமல்ல; உயிரினங்கள் அனைத்தும், சுற்றுச்சூழல் அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றன.

இந்த மாற்றத்தை உலக அரசுகளும், பல்வேறு நிறுவனங்களும் தனியே பிரித்தெடுத்து, வேறுவகையில் பொருள்கொண்டு, கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றிற்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் மிக அதிகமாகப்  பேசி வருகின்றன. மனித சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்த கவலை குறைந்து வருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட "இறைவா உமக்கே புகழ்: நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற திருமடலில், சுற்றுச்சூழல் நீதியும், சமுதாய நீதியும் ஒருங்கிணைந்து செல்லவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதோ, திருத்தந்தையின் வார்த்தைகள்:

"உண்மையான சுற்றுச்சூழல் அணுகுமுறை, எப்போதும், சமுதாய அணுகுமுறையாக மாறவேண்டும் என்பதை நாம் உணரவேண்டும். பூமியின் அழுகுரலையும், வறியோரின் அழுகுரலையும் கேட்கும்வண்ணம், சுற்றுச்சூழல் பற்றிய விவாதங்களில், சமுதாய நீதி பற்றிய கேள்விகள் எழுப்பப்படவேண்டும்" ('இறைவா உமக்கே புகழ்' திருமடல் - எண். 49)

Today, however, we have to realize that a true ecological approach always becomes a social approach; it must integrate questions of justice in debates on the environment, so as to hear both the cry of the earth and the cry of the poor. (Laudato si' – No.49)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.