2015-08-15 15:28:00

கிழக்குத் தீமோரில் நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்பட அழைப்பு


ஆக.15,2015. நம்மோடு வாழும் நம் சகோதர சகோதரிகளின் அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு நாமும், நம் கருணையும், நம் அன்பான தொடுதலும் அவசியமாக இருக்கும்போது நாம் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்க இயலாது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

கிழக்குத் தீமோரில் நற்செய்தி விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு விழா திருப்பலியை இச்சனிக்கிழமையன்று தலைநகர் திலி பேராலயத்தில் நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு  கூறினார்.

கிழக்குத் தீமோரில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஊன்றப்பட்ட கிறிஸ்தவ விசுவாசம் புதுப்பிக்கப்பட்டு, எல்லா மக்களுக்கும் நற்செய்தியின் மகிழ்வும் கருணையும் தொடர்ந்து  அறிவிக்கப்பட வேண்டும், இப்பணியை அந்நாட்டின் அரசு அதிகாரிகள், திருஅவை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் கர்தினால் பரோலின்.

கிழக்குத் தீமோரில் நற்செய்தி விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 13, இவ்வியாழன் முதல், ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமை முடிய கர்தினால் பரோலின் அவர்கள் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு குழுக்களைச் சந்தித்தார். திருப்பீடத்திற்கும், கிழக்கு தீமோர் நாட்டிற்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.