2015-08-15 15:09:00

இறைவன் தம் ஏழை, எளிய மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார்


ஆக.15,2015. வலியோரின் வன்முறையும், செல்வந்தரின் செருக்கும், பெருமையுடையவரின் இறுமாப்பும் இவ்வுலகில் நிலவினாலும், இறைவன் தம் ஏழை, எளிய மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை அன்னை மரியா நம்பி அறிவிக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறினார்.

அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழாவான இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்தவர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியின் புகழ் பாடலை மையமாக வைத்துப் பேசினார்.

அன்னை மரியின் மகிமையும், அவர் ஆசிர்வதிக்கப்பட்டவராக இருந்ததும் அவரின் விசுவாசத்தினாலேயே என்றும், அன்னை மரியாவின் வாழ்வின் ஒவ்வொரு நேரத்திலும் விசுவாசமே மையமாக இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.

வாழ்வின் ஆண்டவரைப் பெற்றெடுத்த மரியின் உதரம் கறைபட இறைவன் அனுமதிக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, மரியின் விண்ணேற்பு, மரியாவை மட்டும் சார்ந்தது அல்ல, ஆனால், இப்பேருண்மையால் நாம் ஒவ்வொருவரும் தொடப்படுகின்றோம் என்றும் கூறினார்.

நம் வாழ்வு அர்த்தமற்றது அல்ல, ஆனால், இது, தம் அன்போடு நமக்காகக் காத்திருக்கும் வானகத் தந்தையின் இல்லத்திற்கு இட்டுச்செல்லும் திருப்பயணமாகும் என்றும், இவ்வுலக வாழ்வை நாம் கடந்து செல்லும்போது, அருளால் முழுவதும் நிறைந்த அன்னை மரியாவை, ஆறுதல் மற்றும் உறுதியான நம்பிக்கையின் அடையாளமாக இறைவன் நமக்குக் காட்டுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

61 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆகஸ்ட் 15, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரை இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது. 1954ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், இப்பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரையாற்றினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இச்செப உரையாற்றினார். 2014ம் ஆண்டில் இந்நாளில் தென் கொரியாவில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இம்மூவேளை செப உரையின் இறுதியில், சீனாவின் தியன்ஜின் நகரில் தொழிற்சாலைப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து, அம்மக்கள் மற்றும் அவர்களின் துன்பங்களைத் துடைக்கப் பணிசெய்வோர்க்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.