2015-08-15 15:37:00

இந்தியத் திருஅவையில் நீதி ஞாயிறு ஆகஸ்ட் 16


ஆக.15,2015. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு இருக்கும் கடமையுணர்வை உணருமாறு இந்திய ஆயர் பேரவையின் நீதி அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆகஸ்ட் 16ம் தேதி இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் நீதி ஞாயிறு வலியுறுத்தும் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆணையத்தின் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Laudato Si’ சுற்றுச்சூழல் திருமடல் வலியுறுத்தியுள்ள கருத்துக்களின் அடிப்படையில், இந்தியாவில் இவ்வாண்டு நீதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகின்றது.

சுற்றுச்சூழல் அழிந்து வருவது தொடர்பாக ஏற்படும் ஆபத்துகள் குறித்து கடந்த பல ஆண்டுகளாக திருத்தந்தையர் எச்சரிக்கை விடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்கள், இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை அழித்துவிடும், இயற்கை ஒருபோதும் நம்மை மன்னிக்காது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும் கோட்டிட்டுக் காட்டியுள்ளார்.

இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்து வரும் ஞாயிறை, நீதி ஞாயிறாக, 1983ம் ஆண்டு முதல் கடைப்பிடித்து வருகின்றது இந்தியத் திருஅவை.

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.