2015-08-14 15:04:00

திருப்பீடத்திற்கும் கிழக்குத் தீமோருக்கும் இடையே ஒப்பந்தம்


ஆக.14,2015. கிழக்குத் தீமோரில் கத்தோலிக்கத் திருஅவைக்கு சட்டமுறைப்படி அங்கீகாரமளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றில், திருப்பீடமும், அந்நாடும், இவ்வெள்ளியன்று கையெழுத்திட்டுள்ளன.

திருப்பீடத்தின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், கிழக்குத் தீமோர் சார்பில் அந்நாட்டுப் பிரதமர் Rui Maria de Araújo அவர்களும் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கிழக்குத் தீமோர் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே வளர்ந்துள்ள நல்ல உறவுகளையும், அந்நாட்டின் முந்தைய மற்றும் தற்போதைய வரலாற்றில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கையும் ஏற்கும் விதமாக இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும், கிழக்குத் தீமோரில் கத்தோலிக்கத் திருஅவையின் சட்டமுறையான இருப்புக்கும், சட்டமுறையான திருமணம், வழிபாட்டுத் தலங்கள், கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மறைக்கல்வி கற்பித்தல், இராணுவம் மற்றும் குற்றவியல் நிறுவனங்களில் திருஅவையின் ஆன்மீகப் பணி, மருத்துவமனைகள், திருஅவை சொத்துக்களைக் கொண்டிருத்தல் உட்பட கத்தோலிக்கத் திருஅவையின் பல்வேறு பணிகளுக்கும் இந்த ஒப்பந்தம் அங்கீகாரம் அளிக்கின்றது.

1769ம் ஆண்டில் கிழக்குத் தீமோரை தனது காலனியாக ஆக்ரமித்த போர்த்துக்கல் நாடு, 1974ம் ஆண்டில் எழுந்த போர்த்துக்கீசிய புரட்சியில் கிழக்குத் தீமோரை விட்டுச் சென்றது. அதன்பின்னர் 1975ம் ஆண்டில் இந்தோனேசியா, கிழக்குத் தீமோரை தன்னோடு இணைத்துக் கொண்டது. பின்னர் 2002ம் ஆண்டில் கிழக்குத் தீமோர் தனி நாடானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.