2015-08-14 15:09:00

கிழக்குத் தீமோர் மக்களின் வாழ்வில் விசுவாசமும் கலாச்சாரமும்


ஆக.14,2015. கிழக்குத் தீமோர் மக்களின் வாழ்வில் விசுவாசமும் கலாச்சாரமும் ஒருங்கிணைந்து செல்வதைத் தொடர்ந்து காக்கும் பொறுப்பு, அரசு மற்றும் திருஅவையிடம் உள்ளது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அந்நாட்டுப் பிரதமரிடம் தெரிவித்தார்.

கிழக்குத் தீமோர் நாட்டில் நற்செய்தி விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு விழா ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவையொட்டி திருத்தந்தையின் பிரதிநிதியாக, அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு குழுக்களைச் சந்தித்துவரும் கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வெள்ளியன்று கிழக்குத் தீமோர் பிரதமர் Rui Maria de Araújo அவர்கள் வழங்கிய விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அந்நாட்டு மக்களில் விசுவாசமும் கலாச்சாரமும் ஒன்றிணைந்து செல்வதைப் பாராட்டினார்.

விசுவாசத்தையும், கலாச்சாரத்தையும் பிரித்துப் பார்க்கும்போது சிலவேளைகளில் மனிதரின் அடிப்படை உரிமைகள் மறக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

திருப்பீடத்திற்கும், கிழக்குத் தீமோர் குடியரசிற்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம், கிழக்குத் தீமோர் மக்களின் வாழ்வில் விசுவாசமும் கலாச்சாரமும் எக்காரணத்தை முன்னிட்டும் பிரிந்து செல்லாமல் இருப்பதற்கான அடையாளமாக இருக்கிறது எனறும் கூறினார் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.