2015-08-14 15:14:00

இளையோருக்குச் சுதந்திரமான இதயம் அவசியம், கர்தினால் பரோலின்


ஆக.14,2015. இவ்வெள்ளியன்று கிழக்குத் தீமோர் இளையோரைச் சந்தித்த கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், சுதந்திரமான இதயத்தைக் கொண்டிருப்பதற்குத் தொடர்ந்து போராடுமாறு கேட்டுக்கொண்டார்.

சுதந்திரமான இதயத்தால் மட்டுமே, கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்று கிழக்குத் தீமோர் இளையோரிடம் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், சுதந்திரமான இதயத்தைத் தரும்படி இயேசுவிடம் செபிக்குமாறும் கூறினார்.

நீங்கள் உலகின் உப்பு, நீங்கள் உலகின் ஒளி என்ற இயேசுவின் திருச்சொற்களை மையமாக வைத்து இளையோரிடம் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இளையோர் கிறிஸ்துவிலும், அவரன்பிலும் வேரூன்றுமாறும் கேட்டுக்கொண்டார்.   

கிழக்குத் தீமோரின் சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் கடும் துன்பங்களை அனுபவித்த மக்கள் குறித்தும் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், சுதந்திர  கிழக்குத் தீமோரில் வாழும் இளையோர், அவர்களின் முன்னோர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகளைக் கட்டிக்காக்குமாறும் பரிந்துரைத்தார்.

கிறிஸ்து, கிழக்குத் தீமோரை வந்தடைந்ததன் அடையாளத்தைக் குறிக்கும் 500ம் ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகளில் இளையோர் தங்களோடு எடுத்துச் சென்ற சிலுவை பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இயேசு கிறிஸ்துவில் விசுவாசமின்றி உண்மையான விடுதலை கிடையாது என்பதை நினைவுபடுத்தினார்.  

இதே நாளில் கர்தினால் பரோலின் அவர்கள், கிழக்குத் தீமோர் துறவறத்தாரைச் சந்தித்து உரையாற்றியதோடு அவர்களுக்குத் திருப்பலியும் நிறைவேற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.