2015-08-13 16:06:00

மாற்றங்களின் காரணிகளாக இளையோரை மாற்றுங்கள்


ஆக.13,2015 மாற்றங்களின் காரணிகளாக இளைஞர்களை மாற்றியமைக்க ஐ.நா. அவையின் ஒவ்வோர் அங்கத்தினர் நாடும் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

ஆகஸ்ட், 12, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட உலக இளையோர் நாளை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், விரைவான மாற்றங்களைச் சந்திக்கும் இன்றைய உலகின் தேவைகளுக்குத் தகுந்த முறையில் பதிலளிக்க, இளைஞர்களால் மட்டுமே இயலும் என்பதால், இளைஞர்களின் குரலுக்கு செவிமடுக்க தலைவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

பாரம்பரிய அதிகார அமைப்பு முறைகளுக்கு சவாலாக இருக்கும் இளையோர், புதிய பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என உரைத்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், அரசுகளுக்கும் மக்கள் சமூகங்களுக்கும் இடையே நிலவும் உறவை மேலும் பலப்படுத்துவதில் இளையோரின் திறமைகளைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலைநிலை பாதுகாப்பு மற்றும், உள்ளவற்றைப் பயன்படுத்தி முன்னேற்றம் என்ற கருத்துக்களில் இவ்வாண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் மாநகரில் உலக உச்சி மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில், இளையோரின் பங்களிப்பு குறித்தும் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.

1999ம் ஆண்டு ஐ.நா.அவை எடுத்த ஒரு தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 12ம் தேதி, உலக இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு கொண்டாடப்படும் உலக இளையோர் நாளுக்கென, "சமுதாயத்தில் இளையோர் ஈடுபாடு" என்ற மையக் கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.