2015-08-13 16:19:00

கிழக்குத் தீமோர் குரு மாணவர்களிடம், கர்தினால் பரோலின்


ஆக.13,2015 அருள் பணியாளர்களாகப் பயிற்சி பெறுவோர், ஒவ்வொரு நாளும், ஆர்வத்துடனும், அர்ப்பண உணர்வுடனும், தங்கள் அன்றாடப் பணிகளை நிறைவேற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கிழக்குத் தீமோர் நாட்டு குரு மாணவர்களிடம் கூறினார்.

கிழக்குத் தீமோர் நாட்டில் நற்செய்தி ஊன்றப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு விழா, ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்வைச் சிறப்பிக்க, திருத்தந்தையின் பிரதிநிதியாக அந்நாட்டுக்குச் சென்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வியாழனன்று, கிழக்குத் தீமோர் நாட்டு குரு மாணவர்களுக்கு திருப்பலியாற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், ஈக்குவதோர் நாட்டில், அருள் பணியாளர்களுக்கு வழங்கிய உரையில், 'ஒவ்வொரு நாளும்' என்ற கருத்தை வலியுறுத்தினார் என்பதை நினைவுகூர்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், மறைபரப்புப் பணியின் உயிர் நாடியாக இருப்பது 'ஒவ்வொரு நாளும்' நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 13, இவ்வியாழன் முதல், 15, இச்சனிக்கிழமை முடிய கர்தினால் பரோலின் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் ஒரு முக்கியக் கட்டமாக, திருப்பீடத்திற்கும், கிழக்கு தீமோர் நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று, ஆகஸ்ட் 15ம் தேதி, கையெழுத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.