2015-08-13 16:27:00

இந்தோனேசியாவில் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்


ஆக.13,2015 அமைதி, சகிப்புத் தன்மை, மற்றும் பலசமய இணக்க வாழ்வு ஆகிய உயர்ந்த விழுமியங்களுக்கு இந்தோனேசிய நாடு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 10, இத்திங்கள் முதல், 12, இப்புதன் முடிய, இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், Retno Marsudi அவர்களிடம் இவ்வாறு கூறினார்.

பல்வேறு மதங்களில் நம்பிக்கை கொண்டோர் இணைந்து வாழ்வது, கலாச்சார கூட்டுறவு, ஊடகத் துறையிலும், கல்வித் துறையிலும் இணைந்து பணியாற்றுதல் ஆகிய கருத்துக்கள், கர்தினால் பரோலின் அவர்கள், இந்தோனேசிய அரசு அதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்திற்கும், ஜகார்த்தாவில் இயங்கி வரும் இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்கும் இடையே கல்விவழி ஒப்பந்தங்கள் நிகழும் வாய்ப்புக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 17ம் தேதி, இந்தோனேசிய நாடு விடுதலை அடைந்ததும், அந்நாட்டை அங்கீகரித்த முதல் நாடு வத்திக்கான் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.