2015-08-13 16:23:00

51வது அகில உலக திருநற்கருணை மாநாடு, நம்பிக்கையை வழங்கும்


ஆக.13,2015 பிலிப்பின்ஸ் நாட்டின், Cebu நகரில், வரும் ஆண்டு சனவரியில் நடைபெறவிருக்கும் அகில உலக திருநற்கருணை மாநாடு, பிலிப்பின்ஸ் மக்களுக்கும், உலக மக்களுக்கும், நம்பிக்கையையும், ஒருமைப்பாட்டையும் வழங்கும் என்று தான் நம்புவதாக, மணிலா பேராயர், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

நடைபெறவிருக்கும் 51வது அகில உலக திருநற்கருணை மாநாடு குறித்து, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், உலக நிகழ்வுகள் பலவற்றால் மனமுடைந்து வாழும் மக்களுக்கு, இந்த மாநாடு நம்பிக்கை தரும் மாற்று அடையாளமாக விளங்கும் என்று கூறினார்.

'கடவுள் நம்மோடு' என்ற பெயரைத் தாங்கி இவ்வுலகில் வாழவந்த 'எம்மானுவேல்' இயேசு, எந்தச் சூழலிலும் தொடர்ந்து நம்முடன் வாழ்கிறார் என்பதை வலியுறுத்தும் ஒரு வாய்ப்பாக, நாம் கொண்டாடவிருக்கும் திருநற்கருணை மாநாடு அமையும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

'கிறிஸ்து நம்மில், மாட்சிபெறுவோம் என்ற எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்' (கொலோ. 1:27) என்ற மையக் கருத்துடன், 51வது அகில உலக திரு நற்கருணை மாநாடு, 2016ம் ஆண்டு, சனவரி, 24 முதல் 31 முடிய பிலிப்பின்ஸ் நாட்டின் Cebu  நகரில் நடைபெறுகிறது.

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.