2015-08-12 15:51:00

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு - 'படைப்பின் பாதுகாவலர்'


ஆக.12,2015 படைப்பைப் பாராமரிக்கவேண்டும் என்ற ஆவல் பல ஆண்டுகளாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்துள்ளது; அந்த ஆவல், அண்மைய காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களாலும், ஐ.நா. அவை காட்டிவரும் ஆர்வத்தாலும் மேலும் வளர்ந்துள்ளது என்று, Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறினார்.

முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்களுக்கு, 'படைப்பின் பாதுகாவலர்' என்ற பட்டம், அண்மையில் வழங்கப்பட்ட வேளையில், முதுபெரும் தந்தை, தன் ஏற்புரையில் இவ்வாறு கூறினார்.

இந்த உலகமும், படைப்பு அனைத்தும், மனிதர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள ஒரு கொடை மட்டுமல்ல, அது நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சவால் என்றும் முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் இறுதியில் பாரிஸ் மாநகரில், காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி நடைபெறும் COP 21 என்ற உலக உச்சி மாநாட்டில் தான் கலந்துகொள்ளவிருப்பதாகவும் முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்கள் எடுத்துரைத்தார்.  

அண்மையில் கொண்டாடப்பட்ட ஆண்டவரின் தோற்ற மாற்றம் திருநாளன்று, துருக்கியின் Prinkipos என்ற தீவில் அமைந்துள்ள தோற்ற மாற்றம் துறவு மடத்தில்,  படைப்பின் பாதுகாவல் பல்சமய அமைப்பு, முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு, இந்த பட்டத்தை வழங்கியது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.