2015-08-12 15:39:00

மறைக்கல்வி உரை : கொண்டாட்டமும் ஓய்வும் இறைவனின் கொடைகள்


ஆக.12,2015. உரோமையில் இந்நாள்களில் கோடையின் வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் கடந்த இரு நாள்களில் பெய்த மழையால் அவ்வெப்பம் சற்றுத் தணிந்துள்ளது. இப்புதன் காலையில் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய புதன் பொது மறைக்கல்வி உரையைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கான பன்னாட்டு பல மொழி பேசும் பயணிகள் கூடியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் முதலில் காலை வணக்கம் சொல்லி இத்தாலியத்தில் உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். குடும்பம் குறித்து திருத்தந்தை வழங்கிவரும் மறைக்கல்வியின் தொடர்ச்சியாக, குடும்ப வாழ்வில் இடம்பெறும் கொண்டாட்டம், வேலை, செபம், ஆகிய மூன்று நிகழ்வுகளை இப்புதனன்று குறிப்பிட்டார். அம்மூன்றில் கொண்டாட்டங்கள் பற்றி இன்று பார்ப்போம் என  மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை.

ஓய்வு, இறைவனின் கண்டுபிடிப்பு. இறைவன் தம் படைப்புப் பணியிலிருந்து ஏழாவது நாள் ஓய்வெடுத்தார் என்று இறைவனின் படைப்பு வரலாறு கதையில் நாம் பார்க்கிறோம். நாம் வேலையில் சேர்வதையோ அல்லது நம் பணியையோ மட்டுமல்ல, ஆனால், நாம் மனிதர்களாக, நம் ஒவ்வொரு செயலின் வழியாக, துன்ப நேரங்களிலும்கூட இறைவனின் படைப்புப் பணியில் ஒத்துழைப்பவர்களாக, நம் தொழில்களின் பலன்களை அனுபவிக்கவும், தியானிக்கவும் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தை இறைவனே நமக்குக் கற்றுக் கொடுக்கிறார். நாம் வேலை செய்யும் இடங்களில்கூட பிறந்த நாளை, திருமணத்தை, குழந்தை பிறந்ததை, பிரியாவிடை அல்லது வரவேற்பு ஆகியவைகளைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்களின் உண்மையான நேரங்கள், நம் வேலையிலிருந்து ஓய்வுபெற வைக்கின்றன. ஏனென்றால் நாம் இறைவனின் சாயலாகவும், உருவாகவும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவை நமக்கு நினைவுபடுத்துகின்றன. இறைவன் வேலைக்கு அடிமை அல்ல, அவர் வேலையின் ஆண்டவர். எனவே நாமும் ஒருபோதும் வேலைக்கு அடிமைகளாக இருந்துவிடக் கூடாது, மாறாக, வேலையின் முதலாளியாக இருக்க வேண்டும். பொருளாதார ஆதாயம் மற்றும் தொழில்நுட்பத் திறமையின் ஆக்ரமிப்பு, மனித வாழ்வின் ஒழுங்கமைவை ஆபத்தில் வைக்கின்றது. ஓய்வு நேரங்கள், குறிப்பாக, ஞாயிறுகளில் ஓய்வு நேரங்கள் புனிதமானவை. ஏனென்றால் அந்நேரங்களில் நாம் இறைவனைக் கண்டுகொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின்  பிரசன்னம், அவரின் அன்பு, அவரின் தியாகம் என, அவரின் திருவருளை நம் கொண்டாட்டங்களுக்குக் கொண்டு வருகிறது ஞாயிறு திருவழிபாடு. அவர் நம்மை ஒரு சமூகமாக அமைப்பது, அவர் நம்மோடு இருக்கும் முறை என இயேசு கிறிஸ்துவின் அருளை அந்நேரங்களில் உணருகிறோம். ஒவ்வொரு நாளின் நம் வேலை, குடும்பம், இன்பங்கள், சோதனைகள், ஏன் நம் துன்பங்கள், மரணம்கூட அனைத்தும் இயேசுவின் அருளால் மாற்றம் அடைகின்றன. நம் கொண்டாட்டங்களிலிருந்து, சிறப்பாக ஞாயிறு திருவழிபாட்டிலிருந்து கிடைக்கும் கொடைகளைப் புரிந்து, வழிநடத்தி மற்றும் அவற்றைப் பேணிக் காக்கும் சலுகைபெற்ற இடங்களாக குடும்பம் எப்போதும் அறியப்படுவதாக.   

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரின் குடும்பங்களும் நம் ஆண்டவரின் அன்பையும் கருணையையும் தினமும் கொண்டாடட்டும், உலகில் அவரின் இருப்புக்குச் சாட்சிகளாகத் திகழட்டும், உங்கள் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக என்று வாழ்த்தினார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.