2015-08-12 16:16:00

திருத்தந்தையின் திருமடல் இந்தியாவின் வறுமையை ஒழிக்க உதவும்


ஆக.12,2015 வறியோருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், இந்தியாவில் நிலவும் வறுமையை ஒழிக்க ஓரளவாகிலும் உதவும் என்று இந்திய காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி Frederick D'Souza அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை வழங்கியுள்ள திருமடல், நடைமுறைக்கு ஏற்றதொரு மடல் என்பதால், அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், வறுமையை ஒழிப்பதில் பெருமளவு உதவும் என்று அருள்பணி D'Souza அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தன்னார்வத் தொண்டுகளில் இளையோர் ஈடுபடுதல், திருஅவை தலைவர்கள் இளையோருக்கு பக்க பலமாக இருத்தல், அரசுகள் மக்களை மையப்படுத்தி முயற்சிகள் மேற்கொள்ளுதல், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் கதைகளை ஊடகங்கள் வெளிக்கொணர்தல் என்ற பல்வேறு எண்ணங்கள், திருத்தந்தையின் திருமடலிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்று அருள்பணி D'Souza அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்பிற்கென இந்தியாவில் 10 இலட்சம் மரங்களை நடும் முயற்சியில் இந்திய காரித்தாஸ் ஈடுபட்டுள்ளதென்று கூறிய காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி D'Souza அவர்கள், பத்து இலட்சம் மரங்களால், கார்பன் வெளியேற்றத்தை 62 இலட்சம் கிலோகிராம் அளவு குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம்: AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.