2015-08-12 15:44:00

திருத்தந்தையின் திருமடல், உலகத் தலைவர்களை ஈர்த்துள்ளது


ஆக.12,2015 படைப்பைப் பாதுகாப்பதற்காக செபிக்கும் நாளாக, செப்டம்பர் முதல் தேதியை, திருத்தந்தை அறிவித்திருப்பது, கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க திருஅவை காட்டிவரும் ஆர்வத்திற்கு, மற்றுமோர் எடுத்துக்காட்டு என்று, திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.

கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபையினர், படைப்பைப் பாதுகாப்பதற்காக செபிக்கும் நாளாக, செப்டம்பர் முதல் தேதியை கடைப்பிடித்து வருவதை அறிந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளை கத்தோலிக்கத் திருஅவையின் செப நாளாக அறிவித்திருப்பது, கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி திருத்தந்தை கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்துகின்றது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்தப் பேட்டியொன்றில் கூறினார்.

பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இயற்கை பாதுகாப்பு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், திருத்தந்தையின் திருமடல், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதைக் காணமுடிகிறது என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையாக பணியாற்றி, இறையடி சேர்ந்த முதலாம் Dimitrios அவர்கள், செப்டம்பர் 1ம் தேதியை, சுற்றுச்சூழலுக்குச் செபிக்கும் நாளாக, 1989ம் ஆண்டு, அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.