2015-08-12 15:58:00

கடுகு சிறுத்தாலும்.... : அவை என்னுடையவையல்ல..


புத்தர் தன் பயணத்தின்போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார். அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள். புத்தரையும், அவருடைய போதனைகளையும் வெறுத்தவர்கள். எனவே ஆனந்தா என்ற அவருடைய முக்கியச் சீடர், அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று பத்தரிடம் கூறினார். ஆனால் புத்தர் அதை மறுத்து, அந்த வழியாகச் சென்றார். அவர் ஊருக்குள் நுழைந்ததுமே, அந்த மதவாதிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித சலனமும் இன்றி, அவ்விடத்தை விட்டுச் சென்றார். அந்த ஊரைக் கடந்ததும், இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க முடியவில்லை “குருவே! அவர்கள் உங்களை இந்த அளவு கேவலமாக பேசி விட்டனர், நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம், குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து, ஏதாவது சொல்லி விட்டு வந்திருக்கலாமே” என்றார். புத்தர் அமைதியாக, தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி, “ஆனந்தா! இது யாருடையது?” என்று கேட்டார். “இது உங்களுடையது” என்றார் ஆனந்தா.

“இல்லை இது உன்னுடையது, இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்” என்றார் புத்தர். சிறிது நேரம் சென்றதும் மீண்டும் ”ஆனந்தா! இது யாருடையது?” என்று கேட்டார். “இது என்னுடையது சுவாமி!” என்றார் ஆனந்தா.

“எப்படி? இது என்னுடையது என்று சொன்னாயே?” என மறு கேள்வி கேட்டார் புத்தர். “சுவாமி! இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள். நான் அதை ஏற்றுக் கொண்டதால் இது என்னுடையதாயிற்று” என்று பதிலளித்தார் ஆனந்தா.

“ஆம், நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால், அது உன்னுடையதாயிற்று, அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவை என்னுடையதல்ல” என்று புன்னகைத்தார், புத்தர் பெருமான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.