2015-08-11 15:52:00

படைப்பைப் பாதுகாப்பதற்கு செபிக்கும் உலக நாளுக்கு வரவேற்பு


ஆக.11,2015. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள, படைப்பைப் பாதுகாப்பதற்குச் செபிக்கும் உலக நாளுக்கு இயற்கையியல் பிறரன்பு அமைப்பு ஒன்று தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.   

இறைவனின் படைப்பான இயற்கைமீது நம் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துள்ள இம்முயற்சி தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, பிரிட்டனிலுள்ள நோவா கிறிஸ்தவ ஒன்றிப்பு பிறரன்பு அமைப்பின் முக்கிய உறுப்பினர் Ruth Jarman அவர்கள், வத்திக்கான் வானொலியில் தெரிவித்துள்ளார்.

இயற்கையைப் பாதுகாப்பதற்குச் செபிப்பதற்கென, கத்தோலிக்கத் திருஅவை தனியாக ஒரு நாளை அறிவிக்காமல், ஏற்கனவே இச்செப நாளைக் கடைப்பிடித்துவரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையோடு இணைந்திருப்பது, திருத்தந்தையின் தாழ்மைப் பண்பின் அடையாளமாக உள்ளது, அதோடு, இந்த முக்கிய விவகாரத்தில் பிற கிறிஸ்தவ சபைகளோடு சேர்ந்து செயல்படுவதற்கு திருத்தந்தை விரும்புவதையும் காட்டுகின்றது என்று கூறினார் Jarman.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் நாள், இந்த உலக செப நாள் சிறப்பிக்கப்படும் என இத்திங்களன்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே இந்நாள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையால் கடைபிடிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.