2015-08-11 16:30:00

பங்களாதேஷ்-வலைப்பதிவாளர்கள் கொலைக்கு மதத் தலைவர்கள் கண்டனம்


ஆக.11,2015. பங்களாதேஷ் நாட்டில் இவ்வாண்டில் இதுவரை நான்கு வலைப்பதிவாளர்கள்  கொல்லப்பட்டுள்ளதற்கு அந்நாட்டின் சமயத் தலைவர்கள் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று 40 வயது நிரம்பிய சமூக ஆர்வலரான Niladri Chatterjee அவர்கள், 5 பேர் கொண்ட கும்பலால் டாக்காவில் அவரது வீட்டிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர், Niloy Neel என்ற புனைப்பெயரில், தனது பிளாக்கில் மத அடிப்படைவாதம் குறித்து விமர்சித்து எழுதி வந்தார். 

Niladri Chatterjee அவர்கள், இவ்வாண்டில் கொலைசெய்யப்பட்டுள்ள நான்காவது வலைப்பதிவாளர் ஆவார். Ananta Bijoy Das, Avijit Roy, Washiqur Rahman ஆகிய மூவரும் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கையற்ற பிளாக்கர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 84 பேரில் இவர்கள் நால்வரும் உள்ளடங்குவர். 

இக்கொலைகள் குறித்து கருத்து தெரிவித்த பங்களாதேஷ் ஆயர் பேரவையின் ஊடக ஆணைக்குழு செயலர் அருள்பணி Joyonta Gomes அவர்கள், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல்விடும் கலாச்சாரத்தையும், அரசு பாதுகாப்பு வழங்கத் தவறுவதையுமே இக்கொலைகள் காட்டுகின்றன என்று தெரிவித்தார்.

பங்களாதேஷ்  முஸ்லிம் தலைவர்கள், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பங்களாதேஷ்க்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி போன்றோரும் இதற்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.