2015-08-11 16:21:00

சிரியாவில் கடத்தல்காரர்களுக்காகச் செபிக்க வேண்டுகோள்


ஆக.11,2015. சிரியாவில், ஹோம்ஸ் நகருக்கு அருகில் கடந்த வாரத்தில் பல கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தியுள்ளதையொட்டி, அம்மக்களின் விடுதலைக்காகச் செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார் அந்நாட்டு அருள்பணியாளர் ஒருவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்து அம்மக்களை விடுதலை செய்ய விரும்புகிறதா அல்லது அம்மக்களைக் கொலை செய்யும் திட்டத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை என்று சிரியாவின் Mar Musa துறவு இல்லத்தைச் சேர்ந்த அருள்பணி Jihad Youssef அவர்கள் கூறினார்.

Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் இவ்வாறு பகிர்ந்து கொண்ட அருள்பணி Youssef அவர்கள், ஹோம்ஸ் நகருக்கு ஏறக்குறைய 60 மைல் தூரத்திலுள்ள Al Quaryatayn நகரில் தங்கியிருந்த ஏறக்குறைய 160 பேரை இம்மாதம் 6ம் தேதி ஐ.எஸ். அரசு கடத்திச் சென்றுள்ளது என்று கூறினார்.

கடத்தப்பட்டுள்ள நம் சகோதர சகோதரிகளுக்காகவும், அவர்களைக் கடத்தியவர்களுக்காகவும் செபிப்போம், கடத்தியவர்களின் மனங்களை இறைவன் மாற்றுவாராக என்று கூறிய அருள்பணி Youssef அவர்கள், சிரியாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சம் அதிகரிப்பதாகவும் கூறினார்.

பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும், சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழுவின் கணிப்புப்படி, ஐ.எஸ். இஸ்லாமிய அரசு கடத்தியுள்ள 230க்கும் மேற்பட்ட மக்களில் குறைந்தது அறுபது பேர் கிறிஸ்தவர்கள் எனத் தெரிகிறது. 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.