2015-08-11 15:42:00

கிறிஸ்துவைச் சந்திக்கும்போது நம் வாழ்வு முழுமையாக மாறும்


ஆக.11,2015. “கிறிஸ்துவுடன் ஏற்படும் சந்திப்பு, நம் வாழ்வை முழுமையாக மாற்றும்”என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஸ்பெயின் நாட்டின் அவிலாவில் நடைபெற்ற ஐரோப்பிய இளையோர் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், இலக்குகள் இல்லாத ஒரு வாழ்வுக்குள் முடங்கிவிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவிலா நகர் புனித தெரேசா பிறந்ததன் 500ம் ஆண்டையொட்டி கடந்த வாரத்தில் நடைபெற்ற இந்த இளையோர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய ஆறாயிரம் இளையோர்க்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித தெரேசா தனது வாழ்வில் இன்னல்கள் நிறைந்த நேரங்களில் இறைவனின் உறுதியான நண்பராகத் தன்னை வெளிப்படுத்தினார், இப்பண்பு இளையோருக்கும் சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாய் உள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரில் இஸ்பெயின் ஆயர் பேரவைக்கு அனுப்பினார். இக்கூட்டத்தின் நிறைவாக, இஸ்பெயின் கர்தினால் Ricardo Blázquez அவர்கள் உட்பட 30 ஆயர்கள் மற்றும் 52 அருள்பணியாளர்கள் இஞ்ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில் திருத்தந்தையின் இச்செய்தி வாசிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.