2015-08-11 15:28:00

அக்கறையின்மையை அகற்றி, அமைதியை வெல்வோம்


ஆக.11,2015. “அக்கறையின்மையை அகற்றி, அமைதியை வெல்வோம்” என்பது, வருகிற சனவரி முதல் தேதி சிறப்பிக்கப்படும் 49வது உலக கத்தோலிக்க அமைதி தினத்திற்கு, தலைப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2016ம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும் 49வது உலக கத்தோலிக்க அமைதி தினத்திற்குத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள இத்தலைப்பை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள திருப்பீடம், அக்கறையின்மை, இக்காலத்தில் அமைதி குறைவதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது.

இக்காலத்தில், புறக்கணிப்பு, தனிமனிதக் கோட்பாட்டின் பல்வேறு வடிவங்களோடு தொடர்பு கொண்டுள்ளது என்றும், தனிமை, அறியாமை, தன்னலம் ஆகியவற்றுக்கு இது காரணமாகி, அக்கறை மற்றும் அர்ப்பணப் பண்புகளைக் குறைக்கின்றது என்றும் திருப்பீடம் கூறியுள்ளது.

ஒவ்வொரு மனிதரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும்போது அமைதி இயலக்கூடியதே என்றுரைத்துள்ள திருப்பீடம், உலகில் நன்மனம் கொண்ட அனைவரும், குறிப்பாக, கல்வி, ஊடகம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களால் இயலக்கூடிய வகையில், கருணையும் மனசாட்சியும் உள்ள உலகை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு 2016ம் ஆண்டு அமைதி தினம் அழைப்பு விடுக்கின்றது என்று தெரிவித்துள்ளது.

இதன் வழியாக இன்னும் அதிகமான சுதந்திர மற்றும் நீதி நிறைந்த உலகு உருவாகும் என்றும் திருப்பீடம் கூறியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் தேதி கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக அமைதி தினம் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் 1967ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு முதல் உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வுலக தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி உலகின் அனைத்து வெளியுறவு அமைச்சர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.