2015-08-10 16:21:00

ஹிரோஷிமா, நாகசாகி மனித சமுதாயத்திற்கு நிரந்தர எச்சரிக்கை


ஆக.10,2015. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்ட நிகழ்வு, போரை நிறுத்த வேண்டும் என்று, மனித சமுதாயத்திற்கு எச்சரிக்கை கொடுப்பதாய் உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார்.

இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுகள் போடப்பட்டதன் எழுபதாம் ஆண்டை நினைவுகூர்ந்த திருத்தந்தை, போர் வேண்டாம், வன்முறை வேண்டாம், உரையாடலும் அமைதியும் வேண்டும் என்ற வேண்டுதல், ஒவ்வோர் இடத்திலிருந்தும் ஒரே குரலாய் ஒலிக்கவேண்டும் என்றும் கூறினார்.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் மனிதர் கொண்டுள்ள வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்தும்போது அது அளவிடமுடியாத அழிக்கும் சக்தியின் அடையாளமாக மாறுவதை, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டது காட்டுகின்றது; மனித சமுதாயம் அமைதிக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்பதற்கு, இந்த அழிவுச்செயல் நிரந்தர எச்சரிக்கையாகவும் உள்ளது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.