2015-08-10 15:31:00

வாரம் ஓர் அலசல் – செவிமடுக்கக் கற்றுக்கொள்ள…


ஆக.10,2015. இஞ்ஞாயிறு திருப்பலியில் வாசகங்கள் வாசிப்பதற்கு முன்னதாக திருப்பலியை நிறைவேற்றிய அருள்பணியாளர் அனைவரிடமும் சொன்னார் – நாம் அனைவரும் செவிமடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. இறைவனின் வார்த்தைகள் வாசிக்கப்படும்போது அவற்றைக் கவனத்துடன் கேட்க வேண்டும், நாம் செவிசாய்ப்பதற்குப் பயில வேண்டும் என்று. பொதுவாக, பிறரைவிட தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பெருமையடித்து இறுமாந்து இருப்பவர்கள், மற்றவர் பேசுவதையோ, மற்றவரின் அனுபவங்களையோ கேட்பதற்கு விரும்பமாட்டார்கள். இதை நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் அனுபவத்திருப்போம். சிறுவரின் வாயும் ஞானத்தைப் பேசும் என்பதற்கேற்ப, ஒருவர் பேசும்போது அவரின் தரம், உருவம், சமூக நிலை என்ற வேறுபாடு இல்லாமல், எல்லாரின் அனுபவங்களுக்கும் நாம் செவிமடுக்க வேண்டும். மகான்கள் வாழ்க்கையில் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு சாதாரண மனிதரிடமும் மிக உயரிய ஆளுமையும், திறமைகளும் மறைந்திருக்கும். இப்படி வரலாற்றில் எத்தனையோ ஞானிகள், அறிஞர்களை நாம் தெரிந்து கொள்ளாமல் விட்டுள்ளோம். இதனால் இந்த மனிதர்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. ஆனால் எல்லாமே தெரியும் என்ற அகந்தை, ஒருவரை எதுவுமே தெரியாதவர்களாக்கி விடும் என்பதும் உண்மை. திரைகளில் இரண்டரை மணி நேரம் வந்துபோகும் அல்லது இவர்கள் போன்ற சிலர் சொல்வதுதான் வேதம் என்று கண்மூடித்தனமாகச் செவிமடுப்பதும் சரியல்ல. 'எல்லா நல்லவருக்கு உள்ளேயும் ஒரு கெட்டவர் இருக்கிறார், எல்லாக் கெட்டவருக்கு உள்ளேயும் ஒரு நல்லவர் இருக்கிறார். சரி, இன்றைய நிகழ்ச்சிக்குச் செவிமடுப்போம்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Michael Stocks என்ற புகைப்பட கலைஞர், போரில் உடல் உறுப்புகளையும் தன்னம்பிக்கையையும் இழந்து, மூலையில் ஒடுங்கிப்போன முன்னாள் இராணுவ வீரர்கள் பலரை வைத்து, ஒரு Fashion Photo shoot நடத்தியிருக்கிறார். இந்தப் புகைப்படங்களை மேலோட்டமாகப் பார்த்தால் வழக்கமான ஃபேஷன் படங்கள் போலவே தோன்றுகின்றன. ஆனால் இவற்றைச் சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்க்கும்போது அவை நம்மைத் திடுக்கிடச் செய்கின்றன. மாடல்கள் போல போஸ் கொடுத்தாலும், அவர்களின் மனவலி, நம் மனதின் எங்கோ ஒரு மூலையில் கேள்விகளை எழுப்புகிறது. ஏனெனில் போரில் ஒரு கால் இழந்த வீரர், இரு கைகளையும் இழந்த வீரர்... இப்படி போர்களில் உறுப்புக்களை இழந்த பலர் பலவிதமான ஆடைகளில் இப்புகைப்படங்களில் உள்ளனர். இந்தப் புகைப்படங்களை, ‘Always Loyal’  என்ற தலைப்பில் ஒரு நாள்காட்டியாகவும் வடிவமைத்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார் Michael Stocks. ‘Loyal’  என்றால் விசுவாசம். இராணுவத்திற்குச் செல்லும் வீரர்களின் விசுவாசத்திற்குக் கிடைக்கும் பரிசு இதுதானா? உடல் உறுப்புக்கள் இழந்த நிலைதானா? என்ற கேள்வி எழுகிறது. 'போர் இல்லாத உலகமே வேண்டும்’என்ற ஆழமான சிந்தனையே இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர் மனதில் எழும்.

உலகில் அமைதி என்ற பெயரில், நாடுகள், பிற நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக பல போர்களைத் தொடுத்து வருவது முரண்பாடாகத் தெரிகின்றது. அதன் இழப்பு அந்த நாடுகளுக்கு மட்டும் அல்ல, அந்த நாடுகளின்மீது போர்தொடுக்கும் நாட்டுக்கும்தான். அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தில், தங்கள் உறவுகளை இழந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். 1861 முதல் 1865 வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒரு நாளைக்கு 420 பேர் வீதம் 7 இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இறந்துள்ளனர். இந்நாட்டில் முதல் உலகப் போரில் 1,16,516 பேர். 2ம் உலகப் போரில் 4,05,399 பேர். வியட்னாம் போரில் 58,209 பேர். கொரியப் போரில் 54,246 பேர். ஈராக் போரில் 4,488 பேர். ஆப்கானிஸ்தானில் 2,229 பேர்... இப்படி அமெரிக்க ஐக்கிய நாடு தொடுத்த மேலும் பல சண்டைகளில் மேலும் பலர் இறந்துள்ளனர். ஆகஸ்ட் 9 இஞ்ஞாயிறன்று ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நினைவுகூரப்பட்டது. இதில் குறைந்தது எழுபதாயிரம் பேர் இறந்தனர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட மூன்று நாள்களில் Kokura என்ற நகரை அணுகுண்டால் தாக்குவதே முதல் திட்டம். ஆனால் ஹிரோஷிமாவில் எழுந்த புகை வானை மறைக்க, குறிதவறி நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

நாகசாகியில் இந்த எழுபதாம் ஆண்டு நினைவு நிகழ்வில் 75 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பகல் 11 மணி 2 நிமிடத்துக்கு அணுகுண்டு வீசப்பட்டது. இஞ்ஞாயிறன்று அதே நேரத்துக்கு அந்நகரில் மௌனம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய 86 வயது நிரம்பிய Sumiteru Taniguchi அவர்கள், போர் குறித்த ஜப்பானின் புதிய சட்டத்தை குறை கூறினார். இவருக்கு 16 வயது நடந்தபோது அணுகுண்டு வீச்சால் தாக்கப்பட்டார். தனது கை கால் சதைகள் கிழிந்து தொங்கியதாக இவர் பகிர்ந்து கொண்டார். என்னைச் சுற்றி இருந்த மக்கள் இறந்தபோது நான் பிழைத்துக்கொண்டேன். ஆனால் நான் இன்னும் துன்பம் அனுபவிக்கிறேன் என்று தெரிவித்தார் Taniguchi.         

இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளை அனுபவித்த அப்பாவி மக்களும், போர்களில் போரிட்டு அதன் பாதிப்புக்களை அனுபவிக்கும் வீரர்களும் அவர்களின் குடும்பங்களும் சொல்வதை நாம் கவனமுடன் கேட்க வேண்டும். அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு உள்ளேயே போருக்கு எதிரான மனநிலை இருக்கிறது என்றே சொல்லப்படுகின்றது. போர், எப்போதுமே மனிதர்களின் ஆழ்மனதிலும், சமூகத்திலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தி விடுகிறது. போரில் உடல் உறுப்புக்களை இழந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு வீரர்களை வைத்து புகைப்பட பேஷன்ஷோ நடத்திய Michael Stocks அவர்களின் புகைப்படங்கள் பற்றி செய்தி வெளியிட்ட விகடன் இதழ், “அடுத்த தளத்தை நோக்கி நகரும் மனித சமூகம், போரை ஒருபோதும் கொண்டாடக் கூடாது. அது மனிதகுலத்தால் கைவிடப்படவேண்டிய ஒன்றுதானே?” என்று கூறுகின்றது. Michael Stocks சொல்லியுள்ளார்-  நான் அந்த வீரர்களின் தன்னம்பிகையையும் சுயமரியாதையையும் மீட்டு எடுக்கிறேன் என்று சிலர் என்னிடம் சொல்கிறார்கள், உண்மையில் அவை அவர்களுக்கு உள்ளேயே இருக்கின்றன. அவற்றை நான் பதிவு மட்டுமே செய்கிறேன்'' என்று. இந்தப் புகைப்படங்களை மொத்தமாகப் பார்க்கும்போது தோன்றும் 'போர் இல்லாத உலகம் வேண்டும்’என்ற எண்ணத்தை, அன்பர்களே நாம் உள்வாங்குவோமா! உலகில் இனிமேல் போர் வேண்டாம் என்ற நமது நல் எண்ணங்கள் ஒருநாள் வெல்லும் என்பதற்கு நம் பங்கை அளிப்போமா!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுகள் போடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தார். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டது, போரை நிறுத்த வேண்டும் என்று, மனித சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது. போர் வேண்டாம், வன்முறை வேண்டாம், உரையாடலும் அமைதியும் வேண்டும் என்று, ஒவ்வோர் இடத்திலிருந்தும் ஒரேமாதிரியான குரல் ஒலிக்க வேண்டும். அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் மனிதர் கொண்டுள்ள வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்தும்போது அது அளவிடமுடியாத அழிக்கும் சக்தியின் அடையாளமாக மாறுவதை இது காட்டுகின்றது. மனித சமுதாயம் அமைதிக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்பதற்கு நிரந்தர எச்சரிக்கையாகவும் இது உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்விண்ணப்பத்திற்குச் செவிசாய்ப்போமா! ஆகஸ்ட் 9, இஞ்ஞாயிறு பழங்குடியினர் தினம். எங்கள் காட்டை எங்களிடம் கொடுங்கள் என்று இம்மக்கள் மனித சமுதாயத்திடம் விண்ணப்பிக்கின்றனர். உலகின் மொத்த பழங்குடி இனத்தவரில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது ஏறக்குறைய பத்து கோடிப் பேர் இந்தியாவில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. உலகில் வனங்களைக் காத்தவர்கள் பழங்குடி இன மக்கள். தெற்காசியக் காடுகளின் பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புலிகளின் அருகில் வாழ்ந்து வந்தவர்கள். ஆனால், இன்று ‘புலிகள் பாதுகாப்பு’ என்ற பெயரில் அம்மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவின் சில பகுதிகளிலிருந்த பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதிகளை விடவும் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் பழங்குடி மக்களின் நில உரிமையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதிகமான எண்ணிக்கையில் வனவிலங்குப் பூங்காக்களை நிறுவி, அங்கிருந்த பழங்குடி மக்களை வெளியேற்றி வருவதுடன், அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர முயற்சிக்கின்றன அரசுகள்.

அமேசான் காடுகளில் பழங்குடி எல்லைகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பழங்குடி மக்களாலேயே நிர்வகிக்கப்படும் நிலையில், அமேசான் வனப் பகுதிகள் அதிகப் பாதுகாப்புடன் இருப்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இதற்கு ஒரு மிக எளிய காரணம் உண்டு. பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாகத் தங்கள் நிலங்களை நிர்வகித்து, பாதுகாத்துப் பராமரித்தவர்கள். எனவே, மற்ற எவரைவிடவும் வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் அறிவும் முனைப்பும் கொண்டவர்கள் அவர்கள்தான் என்று தி இந்து நாளிதழ் கூறுகிறது.

எனவே அன்பர்களே, இம்மக்களின் குரலுக்குச் செவிமடுப்போமா.. ஒருவர் சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தை விரும்புகின்றாரோ அந்த மாற்றத்தை அவர் தன்னிலிருந்தே துவங்க வேண்டும் என்றார் காந்திஜி. நாம் விரும்பும் மாற்றங்களை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.