2015-08-08 14:25:00

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சிலஆண்டுகளுக்கு முன், தொலைக்காட்சியில், ஓர் அழகான குறும்படம் பார்த்தேன். இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்ற அறிமுகத்தைக் கேட்டதும், நம்மில் பலர் இந்தக் கதையின் முடிவை ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான். இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நான் பார்த்தது, என்னை ஆனந்த அதிர்ச்சியடையச் செய்தது. அவ்விரு சிறுத்தைகளும், மானும் அழகாக விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அற்புத காட்சியின் இறுதியில், திரையில் தோன்றிய வரிகள் இவை: "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.

பசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு, எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில், வன்முறை வெறியாட்டத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, மனித வன்முறைகளுக்கு முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

மனிதகுலத்தின் மதியற்ற வன்முறைக்கு, ஜப்பான் மக்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல், ஓர் அழியாத நினைவாக, மனித சமுதாயத்தின் மனசாட்சியை, கீறி வருகிறது. அந்தத் தாக்குதல்களில் ஒன்று, ஆகஸ்ட் 9ம் தேதி நிகழ்ந்ததென்பது, நம் ஞாயிறு சிந்தனையை மீண்டும் வன்முறை நோக்கித் திருப்புகிறது. பசியையும், வன்முறையையும் இணைத்து சிந்திப்பதால், ஒரு சில தெளிவுகளைப் பெற முயல்வோம். இந்தச் சிந்தனைகள் இன்னும் பல கேள்விகளை நமக்கு விட்டுச் செல்லலாம். அந்தக் கேள்விகளுக்கு தொடர்ந்து விடைகள் தேட முயல்வோம்.

மனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப் பாட்டி சொல்லிச் சென்றார். 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில் அவர் பட்டியலிடும் அந்த பத்துப் பண்புகள் இவை:

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)

மானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்தும், பசியால் வாடும் ஒருவனிடமிருந்து ஓடிவிடும் என்பதைப் பாடிவைத்துள்ளார், ஔவைப்பாட்டி.

அவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப் பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி, மனிதர்கள் மட்டும் வேறு பல வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி, ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, 'பசி', பல வடிவங்களில் நம்மை வாட்டுகின்றது. வயிற்றை வாட்டும் பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், நமது மனதை, அறிவை, வாட்டும் வேறு பல பசிகளை, எளிதில் தீர்க்க வழியின்றி, நாம் வன்முறையை மேற்கொள்கிறோம்.

கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களிடையே காணப்படும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதையும் நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக:

பாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. (1அர.19:4-8) இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் அமைய வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுபல மனிதப் பசிகளும், வெறிகளும் வெளிப்படுகின்றன.

இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் -பசியில்- இருந்ததால், எலியா, பாலை நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.

தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பொய் தெய்வங்களை வழிபடும் ஆபத்து நம்மிடையே அதிகம் உள்ளது. எடுத்துக்காட்டாக, பணத்தை, பதவியை, தெய்வங்களாக வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்துதானே வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போர், அவர்களின் தெய்வங்கள் பொய்யானவை என்பதைத் துணிந்து சொல்லும் மனிதர்களை, தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். இவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.

போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, உணவாக வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது.

வானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர்ந்தார் என்று சிந்திக்கும் வேளையில், தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் நடைபெறும் ஒரு மக்கள் போராட்டத்தை, என் மனம் எண்ணிப் பார்க்கிறது. மது என்ற பொய் தெய்வத்தை வழிபட்டு வரும் தமிழக அரசுக்கு எதிராக, மக்கள், அதிலும் குறிப்பாக, இளையோர் கிளர்ந்து எழுந்துள்ளது, நம்பிக்கை தரும் போராட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும், தன் தவறை உணர்ந்து, இந்த பொய் தெய்வத்தை, தமிழக அரசு அழிக்குமா என்ற கேள்வியும், நம்மை வாட்டுகிறது. மக்கள் சொல்லும் உண்மையின் குரலைக் கேட்கமுடியாமல், அரசியல் தலைவர்கள் அரங்கேற்றும் நாடகங்களே, ஊடகங்களின் குரலாக ஒவ்வொரு நாளும் ஓங்கி ஒலிக்கின்றது. அரசியல் தலைவர்கள், ஒருவரை ஒருவர் குறைகூறி விடுக்கும் அவதூறு குரல்களால், மனித உயிர்களைக் குடிக்கும் ஓர் அரக்கனே மது என்று, மக்கள் கதறிச்சொல்லும் உண்மைக்குரல் புதைந்துபோகிறது. அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்களைத் தாண்டி, மக்கள் சொல்லும் உண்மைகள் அரசின் காதில் விழுமா? 

பொதுவாகவே, உண்மைகளைக் கேட்பதற்கு, அவற்றை ஏற்பதற்கு, உயர்ந்த உள்ளம் வேண்டும். உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர் மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. இதோ, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:

யோவான் நற்செய்தி 6: 41-51

அக்காலத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம்?” என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப் பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப் பசியையும் தீர்த்தார் என்பதையும் இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசி போக்கும் எளிதான குறுக்கு வழி, இயேசு, என்றெண்ணிய மக்கள், அவரைத் தேடி மீண்டும் சென்றனர் என்பதை, சென்ற வார நற்செய்தியில் கேட்டோம். தன்னை தேடி வந்த மக்களை, பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசி, இயேசுவுக்கு இருந்திருந்தால், உணவைப் பலுகச் செய்த புதுமையை மீண்டும், மீண்டும் அவர்கள் நடுவில் நிகழ்த்தி, தன் புகழ்பசியைத் தீர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.

மக்கள் பேராசைப்பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். மக்களை விழித்தெழச் செய்வதற்காக இயேசு வழங்கிய உண்மை என்ற கசப்பு மருந்தை ஏற்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல், உண்மையைக் கூறிய இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் யூதர்கள் இறங்கினர். இங்கு 'யூதர்கள்' என்று நற்செய்தியாளர் யோவான் கூறுவது, யூத மதத் தலைவர்களை என்று விவிலிய விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உண்மையை எடுத்துரைக்கும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு வழி, உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது... இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூத மதத் தலைவர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். அவர்களது அர்த்தமற்ற கணைகளை எதிர்கொண்ட இயேசு, அவர்களுக்கும், மக்களுக்கும் நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் சொன்னார். இந்த உண்மைகளை இன்னும் இரு வாரங்கள் நமது  ஞாயிறு வழிபாட்டில் தொடர்ந்து பயில முயல்வோம்.

இன்று ஆகஸ்ட் 9ம் தேதி என்பதால், நமது எண்ணங்கள் ஜப்பானை நோக்கித் திரும்புகின்றன. ஆகஸ்ட் 9, இஞ்ஞாயிறன்று ஜப்பானின் நாகசாகி நகரில் இடம்பெறும் அமைதி முயற்சிகளில் நம்மையே இணைக்க முயல்வோம். 70 ஆண்டுகளுக்கு முன், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளால் தாக்கியபோது, 1,29,000த்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்திற்கும் அதிகமானோர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் துன்புற்று இறந்துள்ளனர்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, Sadako Sasaki என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று  கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.

Sadakoவின் தோழிகள் அவரிடம் ஒரு ஜப்பான் புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி Sadako, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி Sadako நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.

இன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி Sadako, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும். அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசை இருந்திருக்கும் என்று நம்பலாம்.

இன்றும், Sadakoவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின் கடமை.

உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழியவேண்டும்; வன்முறைச் சிறைகளை எழுப்பி, அதனுள் தங்களையும், பிறரையும் சிறைப்படுத்தும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும் என்ற நமது ஆவல், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல்,  உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.