2015-08-08 15:28:00

ஒற்றுமையும் ஒப்புரவுமே ஈராக்கை காப்பாற்றும்


ஆக.08,2015. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மை மதத்தவரின் நெருக்கடி நிலைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுவரும்வேளை, இந்நிலைமை மேலும் மோசமாகிவிடாதவாறு அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார் அந்நாட்டு முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கும், 7ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், நினிவே சமவெளிப் பகுதியில் அதிகமான கிறிஸ்தவர்களைக் கொண்டிருந்த கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி எர்பில் நகரிலும், குர்திஸ்தானின் பிற பகுதிகளிலும் தஞ்சம் அடைந்தனர்.

ஈராக் கிறிஸ்தவர்கள் வரலாற்றில் இடம்பெற்ற இந்தக் கொடுமையான நிகழ்வை முன்னிட்டு ஈராக் அரசுக்கும், நாடாளுமன்றத்திற்கும் கடிதம் எழுதியுள்ள முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், நாட்டில் நிலையான அமைதியை எட்டுவதற்கு, தேசிய அளவில் ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒப்புரவுக்கு உண்மையான அடித்தளமாக அமைவது, ஈராக்கிற்கு விசுவாசமாக இருப்பதும், தனிப்பட்ட ஆள்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ அல்லாமல், நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒன்றிணைந்த தாயகத்தை உருவாக்குவதுமாகும் என்றும்      முதுபெரும் தந்தையின் கடிதம் கூறுகிறது.

கிறிஸ்தவர்களும், யெஜிதி இனத்தவரும் புலம் பெயர்ந்து ஓராண்டு ஆகியும், இன்னும் அவர்கள் முகாம்களில், உடல், மனம் மற்றும் சமூக அளவில் துன்பமான சூழல்களில் வாழ்கின்றனர் என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.