2015-08-08 15:34:00

ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை பிறரன்பு நிறுவனம் உதவி


ஆக.08,2015. ஈராக்கின் பெரிய கிறிஸ்தவ நகரமான Qaraqoshஐ விட்டு ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் வெளியேறியதன் ஓராண்டு நினைவாக, Aid to the Church in Need(ACN) பிறரன்பு நிறுவனம் நாற்பது இலட்சம் டாலர் மதிப்பிலான புதிய உதவிகளுக்கு உறுதியளித்துள்ளது.

Qaraqosh நகரை ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஓராண்டுக்குப் பின்னர், மீண்டும் அந்நகர்மீது கடும் தாக்குதலை இந்த ஆகஸ்ட் 6, கடந்த வியாழனன்று நடத்தியுள்ளனர். இதை முன்னிட்டு அந்நகரில் கிறிஸ்தவர்கள் யாருமே இல்லை.    

இக்கிறிஸ்தவர்கள், 2014ம் ஆண்டு ஆகஸ்டில் ஓரிரவில் அனைத்தையும் விட்டுவிட்டு இடம்பெயர்ந்தனர்.

Aid to the Church in Need(ACN) அனைத்துலக கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம், திருப்பீடத்தின் வழிகாட்டுதலின் பேரில், நசுக்கப்படும் மற்றும் துன்புறும் திருஅவைகளுக்கு 140க்கும் மேற்பட்ட நாடுகளில் உதவி வருகின்றது.

இதற்கிடையே, பாலியல் செயலுக்கு இணங்க மறுத்த, 19 பெண்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பெண்கள், கடந்த ஆண்டில் மொசூல் நகரிலிருந்து பிணையல் கைதிகளாக எடுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.