2015-08-08 15:45:00

Yolanda நிவாரண நிதி நிர்வாகம் குறித்து காரித்தாஸ் கண்டனம்


ஆக.08,2015. பிலிப்பைன்சில் Yolanda கடும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியை அரசு நிர்வகித்து வரும் முறை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறியுள்ளார் பிலிப்பைன்ஸ் காரித்தாஸ் செயலர் அருள்பணி Edu Gariguez.

Yolanda புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசின் நிதி ஒதுக்கீடு, தொடர் நிவாரணப் பணிகளுக்கென செலவழிக்கப்படாமல், 2016ம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தல் செலவுகளுக்கென ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசைக் குறை கூறியுள்ளார் அருள்பணி Gariguez

Yolanda புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இன்னும் தேவைப்படுகின்றன, ஆனால் பிலிப்பைன்ஸ் அரசு இரண்டாயிரத்துக்கு சற்று அதிகமான குடியிருப்புக்களையே அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் கூறினார் அருள்பணி Gariguez.

Yolanda கடும் புயல் ஏற்பட்டு ஈராண்டுகள் ஆகியுள்ளவேளை, 2013ம் ஆண்டு மார்ச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7,315 கோடி பேசோஸ் பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால் அதற்கென ஒதுக்கப்பட்ட பணம் 17,000 கோடி பேசோஸாகும்.  

அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களின் அரசு, நிவாரண நிதியை நிர்வகிக்கும் முறையில் ஒளிவு மறைவற்ற நிலை குறைவுபடுகின்றது என்றுரைத்த அருள்பணி Gariguez அவர்கள், அரசுத்தலைவர் இதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.