2015-08-08 15:50:00

GlobalSat for DRR செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயர்


ஆக.08,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் விதிமுறைகளின்கீழ், நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி உட்பட இயற்கைப் பேரிடர்களைக் குறைப்பது குறித்து ஆராய்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள GlobalSat for DRR என்ற செயற்கைக்கோளுக்கு, APJ அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது.

கானடாவின் Montrealலில் தலைமையிடத்தைக் கொண்டிருக்கும் CANEUS (CANada-EUrope-US-ASia) என்ற இந்த பன்னாட்டு விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் Milind Pimprikar அவர்கள் இத்தகவலை வெளியிட்டார்.

"டிசாஸ்டர் ரிஸ்க் ரிடக்ஸன் குளோபல்சாட் பார் டி.ஆர்.ஆர்.(GlobalSat for DRR)" எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தச் செயற்கைக் கோளுக்கு "UN Kalam GlobalSat" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக Pimprikar தெரிவித்தார்.

அப்துல் கலாம் அவர்களின் "World Space Vision-2050" என்ற திட்டத்தில், மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளாக அமைந்துள்ள இயற்கைப் பேரிடர்கள், தண்ணீர் பற்றாக்குறை, மின்சக்தி பற்றாக்குறை போன்றவற்றுக்கு இத்தகைய விண்வெளி தொழில்நுட்பம் வழியாகத் தீர்வு காண்பதற்குத் திட்டமிட்டிருந்தார் என்று Pimprikar அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை அறிவியலாளராகப் போற்றப்படுபவருமான மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தச் செயற்கைக்கோளுக்கு இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கானடா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களி்ன் சார்பில் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இயற்கைப் பேரிடர் தடுப்பு மற்றும் பேரிடர் நிர்வாகத்திற்கு விண்வெளி தொழில்நுட்பம் வழியாகத் தீர்வு காண்பதற்கென 1999ம் ஆண்டில் CANEUS நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.