2015-08-07 16:32:00

பிலிப்பைன்ஸ் அருள்சகோதரிக்கு ஜெர்மன் மனித உரிமைகள் விருது


ஆக.07,2015. பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்கத் தொழிற்சாலைகளுக்கு எதிராகப் போராடிவரும் பெனடிக்ட் சபை அருள்சகோதரி ஒருவருக்கு ஜெர்மன் நாட்டின் Weimar மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.

47 வயதாகும் அருள்சகோதரி Stella Matutina அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டனாவோ மாநிலத்தில், பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வருகிறார்.

மின்டனாவோ மாநிலத்தில் இடம்பெறும் பெருமளவான சுரங்க வேலைகளை எதிர்த்து இச்சகோதரி நடத்தும் போராட்டங்களால், வன்முறை, கைதுகள் மற்றும் மரண அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளார்.

2012ம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் இராணுவம், அருள்சகோதரி Matutina அவர்களை, போலி  அருள்சகோதரி என்றும், கம்யூனிச புதிய மக்கள் கொரில்லாப் படையில் உள்ளார் என்றும் குறை கூறியது. 2009ம் ஆண்டில் இச்சகோதரி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

ஜெர்மன் நாட்டின் மிசியோ நிறுவனம், Weimar மனித உரிமைகள் விருதை அருள்சகோதரி Stella Matutina அவர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.