2015-08-07 16:12:00

துணிச்சல் இல்லாத இளைஞர், ஏற்கனவே ஓய்வுபெற்ற இளையமுதியவர்


ஆக.07,2015. வாழ்வு என்று ஒன்று இருக்கும்போது அதில் பதட்டநிலைகளும், மோதல்களும் இருக்கும், நெருக்கடிகள் இல்லாத, சச்சரவுகள் இல்லாத ஒரு சமுதாயம், ஒரு குடும்பம், ஒரு நண்பர்கள் குழு கல்லறை போன்றதாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

திருநற்கருணை இளையோர் இயக்கம்(EYM) தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் நகரில் இடம்பெறும் அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 1,500க்கு மேற்பட்ட இளையோரை இவ்வெள்ளியன்று வத்திக்கான் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இச்சந்திப்பில், இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், ஆர்ஜென்டீனா, இந்தோனேசியா, தாய்வான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு இளையோர் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்டனர். இவற்றுக்குப் பதிலளித்த திருத்தந்தை, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் இடம்பெறும் மோதல்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், உண்மைக்கும், போலி அமைதிக்கும் இடையே தேர்ந்து தெளிவு பெறுவது குறித்தும், இவ்வுலகின் நம்பிக்கையின் அடையாளங்கள் குறித்தும், திருநற்கருணையில் இயேசுவோடு நம் உறவை ஆழப்படுத்துவது குறித்தும் பேசினார்.

இவ்வுலகம், பல அருவருப்பான காரியங்களைக் கொண்டிருக்கின்றது, நாம் போர் புரிந்துகொண்டிருக்கிறோம், ஆயினும் இவ்வுலகில் அழகான பல நல்ல காரியங்கள்  இருக்கின்றன, இறைமக்கள் மத்தியில் பல மறைந்த புனிதர்கள் உள்ளனர், இறைவன் இவ்வுலகில் பிரசன்னமாக இருக்கிறார், நாம் நம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன, துணிச்சலோடு இருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறந்து போன பொருள்களில் நெருக்கடியும், சண்டைகளும் இருக்காது, ஆனால் அவற்றில் வாழ்வு இருக்கும்போது அங்கே நெருக்கடியும், சண்டைகளும் இருக்கும், இக்கருத்தில் வளர வேண்டுமென இளையோரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தனது சொந்த வாழ்விலும் நெருக்கடிகள் உள்ளன, நான் வாழ்கிறேன் என்பதை அவை எனக்கு உணர்த்துகின்றன என்றும் தெரிவித்தார். 

விண்ணகத்தில் மட்டுமே நெருக்கடிகள் இருக்காது, அங்கு இயேசு கிறிஸ்துவோடு நாம் அமைதியில் ஒன்றித்திருப்போம் என்றும் கூறிய திருத்தந்தை, துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும், நாம் வளர்வதற்கும், நெருக்கடிகள் உதவுகின்றன என்றும், துணிச்சல் பண்பில்லாத இளையோர், இளமையிலே முதுமை அடைந்தவர்கள் என்றும்,  துணிச்சல் இல்லாத இளைஞர், ஏற்கனவே ஓய்வுபெற்ற முதியவராகி விடுகின்றார், இளையோரே தயவுகூர்ந்து ஓய்வு பெற்று விடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.  

பதட்ட, நெருக்கடிநிலைகளை உரையாடல் வழியாக எதிர்கொள்ள வேண்டும், நெருக்கடிகளுக்கு அஞ்சக் கூடாது, அஞ்சினால் அவை நல்லிணக்க வாழ்வைக் கெடுத்துவிடும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வாழ விரும்பும், ஐந்துக்கும், 25 வயதுக்கும் இடைப்பட்ட சிறாரும், இளையோரும், திருநற்கருணை இளையோர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பிரான்ஸ் நாட்டு இயேசு சபை அருள்பணியாளரால் லூர்து நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது, ஐந்து கண்டங்களில் 56 நாடுகளைச் சேர்ந்த 11 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

உரோம் நகரில் இச்செவ்வாயன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒரு வார அனைத்துலக கருத்தரங்கு, “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும்…”(யோவா.15,11)என்ற தலைப்பில் நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.