2015-08-07 15:44:00

கடுகு சிறுத்தாலும்...: ஒரு தாயின் உயர்ந்த உள்ளம்


போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. இராணுவப் படைவீரர்கள் கும்பலாக வந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். இராணுவம் வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினார். இராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இல்லையெனில் மூவரும் வெட்டிச் சாய்க்கப்படுவர். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்த்தார். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு மற்ற குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடினார். இறக்கி விடப்பட்ட குழந்தை அத்தாயின் கண்முன்னே வெட்டப்பட்டு மரணமடைந்தது. அத்தாயிடம் ஒரு பெரியவர் கேட்டார், ''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலி கொடுக்கத் துணிந்தாய்?'' என்று. அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னார், ''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இராணுவம் வந்தது. பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்'' என்று.

அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் ஜப்பானியக் கதை இது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.