2015-08-07 16:36:00

அரசுத்தலைவர்தேர்தல் அரசியல்அமைப்பின்படி நடப்பதற்கு அழைப்பு


ஆக.07,2015. லெபனானில் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தங்களின் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அரசுத்தலைவர் தேர்தல், சனநாயக மற்றும் அரசியல் அமைப்பின்படி இடம்பெறுவதற்கு வழிவகுக்குமாறு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை ஆயர்களும், துறவு சபை தலைவர்களும் ஏறக்குறைய ஒரு மாதம் கூட்டம் நடத்திய பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டில் அரசுத்தலைவர் இடம் தொடர்ந்து காலியாக இருப்பது, மக்களாட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும் என்ற தங்களின் கவலையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் அரசியல் வாழ்வு முடங்கிக் கிடப்பதும், நாட்டில் இடம்பெறும் பொருளாதார நெருக்கடியும், ஒவ்வொருவரும் தேசிய நலன்மீது அக்கறை கொண்டு நாட்டின் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அழைப்பு விடுக்கின்றன என்றும் ஆயர்களின்  அறிக்கை கூறுகிறது.

லெபனானில், ஓராண்டுக்கு மேலாக அரசுத்தலைவர் இடம் காலியாக உள்ளது. புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, 2014ம் ஆண்டு மே மாதத்திலிருந்து   நாடாளுமன்றம் பலமுறை கூடியும், ஹெஸ்புல்லா மற்றும் மிஷேல் அவுன் அவர்களின் கிறிஸ்தவக் கட்சியின் கூட்டமைப்பின் எதிர்ப்பால் புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமலே உள்ளார்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.