2015-08-05 16:37:00

பெத்லகேமில் இந்திய வழிமுறையில் கிறிஸ்து பிறப்பு


ஆக.05,2015. இந்தியக் கலாச்சாரத்தைப் பின்புலத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்புக் காட்சி, பெத்லகேமில் உள்ள கிறிஸ்து பிறப்புக் கண்காட்சியில் அண்மையில் இணைக்கப்பட்டது.

கொல்கத்தா நகரில் இயங்கிவரும் Church Art என்ற நிறுவனம், Fibre glass உதவியுடன்  உருவாக்கியுள்ள கிறிஸ்து பிறப்புக் காட்சியில், இந்தியக் கலாச்சாரத்தின் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் நினைவுறுத்தும் இந்தக் காட்சி, இத்தனை ஆண்டுகள் கழித்து, இந்த அகில உலகக் கண்காட்சியில் இடம்பெறுவதை பெருமையாகக் கருதுகிறேன் என்று, பெத்லகேம் அருங்காட்சியகத்தின் மேற்பார்வையாளரான, அருள்பணி ஜேசுதாஸ் ஆரோக்கியம் அவர்கள், தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்தவர்கள் உருவாக்கியுள்ள 223 கிறிஸ்து பிறப்புக் காட்சி உருவாக்கங்கள், பெத்லகேம் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்திய கிராமத்தை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியில், இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து சோழ அரசரும், வடக்குப் பகுதியிலிருந்து இராஜபுத்திர அரசரும், கிழக்குப் பகுதியிலிருந்து அஸ்ஸாம் அரசரும் மூன்று அரசர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர் என்று Church Art நிறுவனத்தின் தலைவர், சுப்ராத்தா கங்கூலி அவர்கள் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இத்தாலியின் தூரின் நகரில் துவக்கப்பட்டு, 1999ம் ஆண்டு, பெத்லகேமில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்புக் கண்காட்சி, UNESCOவின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. 

ஆதாரம் : TheHindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.