2015-08-05 16:26:00

திருத்தந்தையின் அமெரிக்கப் பயணம், சவால்களை முன்வைக்கும்


ஆக.05,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின்போது, அமெரிக்க மக்கள், தங்கள் அரசியல் சட்டத்தில் வகுத்துக்கொண்டுள்ள உயர்ந்த கொள்கைகளை வாழ்வதற்கு அவர்களைத் தூண்டுவார் என்று திருப்பீடத்தில் பணியாற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதர், Ken Hackett அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 22 முதல் 27 முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் பயணம், அமெரிக்க மக்களுக்கு சவால்களை முன்வைக்கும் ஒரு பயணமாக அமையும் என்று, CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் Ken Hackett அவர்கள் எடுத்துரைத்தார்.

கடந்த ஈராண்டுகளாக தான் ஆற்றியுள்ள தூதரகப் பணிகளைப் பற்றி கூறிய Ken Hackett அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உள்ளத்திலிருந்து பேசுவதால், அது அமெரிக்க மக்களின் உள்ளங்களையும் தொடும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

வறுமை, புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகள், காலநிலை மாற்றம், மனித உயிருக்கு வழங்கப்படவேண்டிய மதிப்பு ஆகிய கருத்துக்கள் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின்போது பேசப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக, Ken Hackett அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.