2015-08-05 16:09:00

கல்வியுடன் நம்பிக்கையையும் அளிக்க முடியும் - பேராயர் வார்தா


ஆக.05,2015. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், தற்போது சந்திக்கும் பெரும் சவால்களாக இருப்பவை, 'அறியாமையும் படிப்பறிவின்மையும்' என்று கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த பேராயர் பஷார் வார்தா (Bashar Warda) அவர்கள் கூறினார்.

சென்ற ஆண்டு, ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில், ஈராக்கின் நினிவே சமவெளியிலிருந்து கிறிஸ்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவையொட்டி, ஆசிய செய்திக்கு அளித்தப் பேட்டியில், பேராயர் வார்தா அவர்கள் இவ்வாறு கூறினார்.

அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவிக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களில் வாழும் அடுத்தத் தலைமுறையினர், கல்வியறிவு பெறமுடியாமல் போனால், அது நாட்டின் எதிர்காலத்தையே பெரிதும் பாதிக்கும் என்று, பேராயர் வார்தா அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள இளையோருக்கு வழங்கப்படும் கல்வியுடன், அவர்களுக்கு நம்பிக்கையையும் அளிக்க முடியும் என்பதால், அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் தலத்திருஅவை செய்து வருவதாக பேராயர் வார்தா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.