2015-08-04 15:34:00

திருத்தந்தை - அனைத்துலக பீடச் சிறார் சந்திப்பு


ஆக.04,2015. “இறைவனின் அன்பு நம்மில் ஆழமாக வேரூன்ற நம்மை அனுமதிப்போம். அப்படிச் செய்வதன் வழியாக, நம்மைப் பிறருக்குக் கொடுக்க இயலும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அனைத்துலக பீடச் சிறார்களின் திருப்பயணத்தில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் பீடச் சிறார் மற்றும் அவர்களுக்குப் பொறுப்பானவர்களை, இச்செவ்வாய் மாலை ஆறு மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், திருநற்கருணை இளையோர் இயக்கத்தின் (EYM) 1,500க்கு மேற்பட்ட பிரதிநிதிகளை, ஆகஸ்ட் 07, வருகிற வெள்ளிக்கிழமையன்று, வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்திக்கவுள்ளார், திருத்தந்தை.

இந்த இளையோர் இயக்கத்தின் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் நகரில் இச்செவ்வாயன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வார அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இளையோர் பிரதிநிதிகள் திருத்தந்தையைச் சந்திக்கவுள்ளனர்.

இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வாழ விரும்பும், ஐந்துக்கும், 25 வயதுக்கும் இடைப்பட்ட சிறாரும், இளையோரும், திருநற்கருணை இளையோர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 11 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த இளையோர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.