2015-08-04 16:07:00

கொரியத் தீபகற்பத்தில் ஒன்றிப்பு ஏற்படுவதற்கு ஆகஸ்ட் 9 செபம்


ஆக.04,2015. கொரியத் தீபகற்பத்தில் அமைதியும் ஒன்றிப்பும் ஏற்படுவதற்கு, வருகிற ஞாயிறன்று அனைவரும் ஒன்றிணைந்து செபிக்குமாறு WCC உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றம், தனது உறுப்பு சபைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொரியத் தீபகற்பத்திற்காகச் செபிக்கும் இச்செப நாள் குறித்துப் பேசிய, WCC மன்றத்தின் அனைத்துலக விவகார இயக்குனர் Peter Prove அவர்கள், வட மற்றும் தென் பகுதி மக்களைப் பிரித்த, கொரியத் தீபகற்பத்தின் பிரிவினை, நம் காலத்தின் மிகப் பெரிய அரசியல் மற்றும் ஆன்மீகச் சவால்களில் ஒன்று என்று கூறினார்.

இவ்விரு நாடுகளின் அமைதி மற்றும் ஒன்றிப்புக்காக, இவ்விரு நாடுகளின் கிறிஸ்தவ சபைகளோடு சேர்ந்து செபிப்பது, ஒருமைப்பாட்டின் குறிப்பிடத்தக்க செயலாகும் என்றும் கூறினார் Peter Prove.

வட மற்றும் தென் கொரிய நாடுகளின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்வரும் ஞாயிறை, இவ்விரு நாடுகளின் அமைதி மற்றும் ஒன்றிப்புக்காகச் செபிக்கும் நாளாக, WCC உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றம் கடைப்பிடித்து வருகிறது. இவ்வாண்டு, இவ்விடுதலையின் எழுபதாம் ஆண்டு நிறைவாகும். இவ்வாண்டு இச்செப தினம், ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, கொரியத் தீபகற்பம் ஜப்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்தது. ஆயினும், அதே நாளில் கொரியத் தீபகற்பம், இரு கொரிய நாடுகளாகப் பிரிந்தது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.