2015-08-03 17:13:00

தமிழகத்தில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது


ஆக.03,2015. கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழகத்தில், பருத்தி விதைப் பண்ணைகளில் பயன்படுத்தப்பட்ட சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை, பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக, சிறார் தொழிலாளர் தடுப்பு அமைப்பும்,  இந்தியாவுக்கான நெதர்லாந்து குழுவும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் இத்தொழில்துறையில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ள அதே வேளையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஐநாவின் குழந்தைகள் நல நிதியமான யுனிசெஃப் அமைப்பு, உள்ளூர் உதவி அமைப்புகளுடனும், உள்ளூர் அரசு அதிகாரிகளுடனும் சேர்ந்து முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் பலனாக, தமிழ்நாட்டில் இந்த பலன் ஏற்பட்டுள்ளதாக, யூனிசெஃப் நிறுவனத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற வித்தியாசாகர் கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட அளவில், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாததே அவ்விடங்களில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.