2015-08-01 16:12:00

உலகில் பத்து கோடி கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்


ஆக.01,2015. உலக அளவில் பத்து கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவில் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்திற்காகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று ஒரு கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

பத்து கோடிக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களும், பிற சிறுபான்மை மதத்தவரும் தங்களின் மத நம்பிக்கைக்காக, சர்வாதிகார ஆட்சிகளின் கரங்களில் பாகுபடுத்தப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர் மற்றும் வன்முறைகளை அனுபவிக்கின்றனர் என்று இத்தாலிய காரித்தாஸ் பிறரன்பு நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வட கொரியாவில் ஐம்பதாயிரம் முதல் எழுபதாயிரம் கிறிஸ்தவர்கள் வரை தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சில ஆப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை வெளிப்படையாகத் தெரிகின்றது என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

2013ம் ஆண்டு நவம்பருக்கும், 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், மத நம்பிக்கைக்காக, 4,300 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், 1,062 ஆலயங்கள் தாக்கப்பட்டன என்றும் இந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இத்தகைய வன்முறை, பிற சிறுபான்மை மதத்தவர் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும் இடம்பெறுகின்றது என்றும், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தாக்குதல்கள் இடம்பெறும் மத்திய கிழக்கில் நிலைமை மிகவும் கவலைக்குரியதாய் உள்ளது என்றும் இந்நிறுவன அறிக்கை கூறியுள்ளது

"Perseguitati" என்ற தலைப்பில், லொசர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் நாளிதழில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது இத்தாலிய காரித்தாஸ் நிறுவனம்.

ஆதாரம் : AGI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.