2015-07-30 17:20:00

மியான்மாரில் ஏறக்குறைய 7,000 கைதிகள் விடுதலை


ஜூலை,30,2015. மியான்மாரில் அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின்கீழ் 200க்கு மேற்பட்ட வெளிநாட்டவர் மற்றும் முன்னாள் இராணுவ உளவுப்பிரிவு அலுவலகர்கள் உட்பட ஏறத்தாழ ஏழாயிரம் கைதிகள் இவ்வியாழனன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளில் சீனாவைச் சேர்ந்த 153 மரம் வெட்டும் தொழிலாளர்களும் உள்ளடங்குவர் என்றும், இவர்கள் கடந்த வாரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மியான்மார் அரசுத்தலைவர் தெயின் செயின் அவர்கள் அலுவலக இயக்குனர் Zaw Htay அவர்கள், இவ்விடுதலை குறித்து ஊடகங்களிடம் தெரிவித்தபோது, 210 வெளிநாட்டவர் மற்றும் ஒன்பது முன்னாள் இராணுவ உளவுப்பிரிவு அலுவலகர்கள் உட்பட 6,966 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் அந்நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டின் அதிபர் இந்த மன்னிப்பை வழங்கியிருப்பதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டில் இராணுவத்தின் உதவியுடன் அதிபராகப் பதவியேற்ற தெய்ன் செய்ன் அவர்கள், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்னும் 150க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  

ஆதாரம் : AP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.